சனி, 10 செப்டம்பர், 2011

சிற்பி பற்றி விக்கிப்பீடியா ( ஆங்கிலத்தில் தகவல்கள்)

சிற்பி பற்றி விக்கிப் பீடியா தகவல்களைப் பார்க்கப் பின்வரும் சுட்டியைத் தொடுக http://en.wikipedia.org/wiki/Sirpi_Balasubramaniamhttp://en.wikipedia.org/wiki/Sirpi_Balasubramaniam

sirpi talk


sirpi about tagore


sirpi pavalavilla - kundrakkudi adikalar valthurai


கவிஞர் சிற்பியின் பவளவிழா ஏற்புரை


சிற்பி அவர்களின் பேட்டி


சிற்பியைப் பற்றி வானவராயர்




கவிஞர் வைரமுத்து அவர்களின் பேச்சு






அப்துல்கலாம் அவர்களின் பேச்சு





 

சனி, 2 ஜூலை, 2011

சிற்பி பற்றிய தகவல்கள்



  

சிற்பி பற்றி

அவரின் வாழ்க்கை
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தளம்

     தமிழ்நாட்டின் தென்மேற்கு எல்லையில் கேரளத்தை ஒட்டி இருக்கும் மாவட்டம் கோயம்புத்தூர். கோவை என்ற இந்த மாவட்டத்தில் உள்ள ஆத்துப் பொள்ளாச்சியில் 29-7-1936-இல் பிறந்தார். பொ.பாலசுப்பிரமணியன் என்ற தம் பெயரைக் கவிதைக்காகச் சிற்பி என்று புனைந்து கொண்டார்.

    * கல்வியும் பணியும்                                                  

  
     இளம் வயதிலேயே கவிதைகள் எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மலையாள மொழியையும் நன்கு அறிந்தவர். மலையாள மகாகவி வள்ளத் தோளுடன் தமிழ் மகாகவி பாரதியை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார். பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஆற்றினார். பின்னர்க் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றார்.

  

    * கவிஞர் சிற்பி

  
     மரபு இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றுப் பின்னர்ப் புதுமை நாட்டத்தால் புதுக்கவிதை எழுத வந்த கவிஞர்களுள் பலர் தமிழ்ப் பேராசிரியர்கள். சிற்பி, மீரா, அப்துல் ரகுமான், அபி, நா.காமராசன், தமிழன்பன், இன்குலாப், மு.மேத்தா..... என்று இப்பட்டியல் நீளும். இவர்களுள் தமக்கென்று ஒரு தனி வழி வகுத்துக் கொண்டு எழுதி வருபவர் சிற்பி.

     பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் உந்து விசையாய் இருந்து, புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கேற்றவர்.

    * படைப்புகள்

  
     நிலவுப்பூ (1963), சிரித்த முத்துக்கள் (1968), ஒளிப்பறவை (1971), சர்ப்ப யாகம் (1974), புன்னகை பூக்கும் பூனைகள் 1980), மௌன மயக்கங்கள் (1982), சூரிய நிழல் (1991), இறகு (1996) ஒரு கிராமத்து நதி முதலிய கவிதை நூல்களைப் படைத்திருக்கிறார். இன்னும் எழுதி வருகிறார். கவிதை நாடகம் : ஆதிரை, குழந்தை இலக்கியம்: வண்ணப்பூக்கள், சிற்பிதரும் ஆத்திசூடி. உரைநடையிலும் பத்துக்கு மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் ஒரு நூலையும் படைத்துள்ளார்.

    * விருதுகள்

  

     சாகித்ய அகாதமி விருது, தமி்ழ்நாடு அரசின் பரிசு, பாவேந்தர் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகப் பரிசு எனப் பல பெருமைகளைப் பெற்றவர்.

     தம் பெயரில் ஒரு ‘கவிதை அறக்கட்டளை’யை நிறுவி இருக்கிறார். ஆண்டுதோறும் சிறந்த முதுபெரும் கவிஞர் ஒருவரையும் இளங்கவிஞர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறார்.

     இக்காலத் தமிழ்க் கவிஞர்களுள் ஒரு தனிச்சுடராய் ஒளிர்கிறார்.
http://www.tamilvu.org/courses/degree/p103/p1032/html/p1032411.htm

விக்கிப் பீடியா தளம்


சிற்பி பாலசுப்ரமணியம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்ற ஊரைச் சார்ந்தவர். பெற்றோர்-பொன்னுசாமி, கண்டியம்மாள். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

மு. இளங்கோவனின் வலைப்பூ

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

கொங்குநாடு எத்தனையோ தமிழ் அறிஞர்களை வழங்கியுள்ளது.அடியார்க்குநல்லார் தொடங்கி தெய்வசிகாமணி கவுண்டர் வரை கொங்குநாட்டுப் புலவர்களின் பணிகளை நாம் கவனத்தில் கொண்டு பார்த்தால் இவர்களின் பாரிய பங்களிப்பு தமிழுக்கு அமைந்துள்ளமை விளங்கும். சிலப்பதிகார உரைவரைந்த அடியார்க்கு நல்லார் பொப்பண்ண காங்கேயன் வழங்கிய சோற்றுச்செருக்குதான் இவ்வாறு உரை வரைய வைத்தது என்று குறிப்பிடுவார்.புலவர்களும் புரவலர்களும் மலிந்த கொங்நாட்டில் இன்று வாழும் அறிஞர்களில் கவிஞர் சிற்பி குறிப்பிடத்தக்கவர்.

கவிஞர் சிற்பி பற்றி கல்லூரிக் காலங்களில் பெயர் மட்டும் அறிந்திருந்தேன்.ஆய்வு மாணவனாக வளர்ந்தபொழுது இவர் படைப்புகளில் வகைதொகையில்லாமல் வடசொற்கள் திணிக்கப்பட்டடிருந்தது கண்டு இவர் மேல் ஒரு பற்றற்ற தன்மையே எனக்கு இருந்தது. பின்னாளில் இவர் எழுதிய ஓணான் சாபம் குறித்த கவிதை என்னை இவரை உற்று நோக்க வைத்தது.

பின்னாளில் பல உரைகள், கட்டுரைகள்,கவிதைகள் கேட்டும் கண்டும் இவர்மேல் மிகச்சிறந்த ஈடுபாடு ஏற்பட்டது.அண்ணன் அறிவுமதி அவர்கள் சிற்பியின் பழைமைப் பற்றை எனக்கு அடிக்கடி எடுத்துக்கூறுவார் பழைமையின் வேரிலிருந்து புதுமை படைக்கும் இவர் சென்னையில் பேசிய பேச்சை அண்ணன் அறிவுமதி அவர்கள் தம் கவிதை இதழொன்றில் பதிவு செய்ததை நினைத்து மகிழ்கிறேன்.ஈழத்தமிழர்களின் மேல் இவருக்கு இருந்த ஈடுபாடும்,கனிவும் மேலும் இவர் மீதான மதிப்பைக் கூட்டியது.அண்மைக் காலமாக இவர் மாணவர்கள் பலரும் எனக்குத் தொடர்ந்து நண்பர்களாக வாய்த்ததும் சிற்பி அவர்களின் உண்மைத்திறனை அறிய எனக்கு வாய்ப்பை உண்டாக்கியது.

கவிஞர் சிற்பி அவர்கள் இப்பொழுது சாகித்திய அகாதெமியின் தமிழ் அறிவுரைஞர் குழு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகின்றார்.அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்படைப்புகளை வழங்கிய சிற்பி அவர்களின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை.அவர்தம் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைப்பதில் மகிழ்கிறேன்.

கவிஞர் சிற்பி அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சி என்ற சிற்றூரில் 29.07.1936 இல் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர்கள் கி.பொன்னுசாமி,கண்டி அம்மாள் ஆவர்.இயற்பெயர் பாலசுப்பிரமணியம் என்பதாகும்.கேரளத்தில் பள்ளிக்கல்வி பயின்றவர்.அண்ணாமலைப் பல்கலைக்கழக்கழகத்தில் இளங்கலைத் தமிழ்(ஆனர்சு) பயின்றவர்.1987 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்(1989 வரை).1989 இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.தமிழ், ஆங்கிலம், மலையாளம்,உருசியன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர் சிற்பி.

மொழிபெயர்ப்புக்காகவும்(2001),படைப்பிலக்கியத்துக்காகவும்(2003)இருமுறை சாகித்திய அகாதெமி பரிசில் பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது,அரசர் முத்தையாவேள் பரிசில் பெற்றவர்.கலைமாமணி விருந்து,கபிலர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த கவிஞராகவும்,நல்ல மொழிபெயர்ப்பாளராகவும்,புகழ்பெற்ற கல்வியாளராகவும், இலக்கிய இதழாசிரியராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்கும் சிற்பி அவர்கள் படிப்பும்,எழுத்தும்,பேச்சும் தம் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர்.

இதுவரை 15 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் 6 இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

வானம்பாடி,அன்னம்விடுதூது,வள்ளுவம்,கவிக்கோ உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.வானம்பாடி கவிதை இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்தபொழுது சிற்பியின் பங்களிப்பும் இருந்தது.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும்(2000-2005)ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு மன்றத்தின் தலைவராகவும்,கவிஞர் சிற்பி அறக்கட்டளையின் தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர்.இவை தவிர இந்திய அரசு,தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம்(1989-1991),இடைக்காலக் கொங்குநாட்டின் சமூக-பொருளாதார அமைப்புகள்(1993-1997),கொங்கு களஞ்சியம்(ப.ஆ) ஆகிய திட்டப்பணிகளில் ஈடுபட்டு உழைத்துப் பல செய்திகளை ஆவணப்படுத்தியவர்.பல்வேறு கருத்தரங்குள்,பயிலரங்குகள் ஏற்பாடு செய்து பலருக்கும் பயன்படும் பணிகளைச் செய்தவர்.பல்கேரியா(1983),சோவியத் ஒன்றியம்(1983),அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்சு உள்ளிட்ட அயல்நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம்,கன்னடம்,இந்தி,மலையாளம்,மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1996 இல் சிற்பி அறக்கட்டளையைத் தொடங்கித் தமிழ்க்கவிஞர்கள் பலருக்குப் பரிசில் வழங்கிப் பாராட்டும் கொடையாளராகவும் விளங்கி வருகின்றார்.

சிற்பியின் படைப்புகள்

சிற்பி அவர்கள்

01.நிலவுப்பூ(1963) கவிதைகள்
02.சிரித்த முத்துக்கள்(1968)கவிதைகள்
03.ஒளிப்பறவை(1971)கவிதைகள்
04.சர்ப்பயாகம்(1976)கவிதைகள்
05.புன்னகை பூக்கும் பூனைகள்(1982)கவிதைகள்
06.மௌன மயக்கங்கள்(1982)கவிதைகள்
07.தேனீக்களும் மக்களும்(1982)மொழிபெயர்ப்பு
08.மகாகவி பாரதி-சில மதிப்பீடுகள்(1982)ப.ஆ
09.இலக்கியச் சிந்தனை(1989)
10.சூரியநிழல்(1990)கவிதைகள்
11.மலையாளக் கவிதை(1990)கட்டுரைகள்
12.A Comparative Study of Bharati and Vallathol(1991) ஆய்வுநூல்
13.ஆதிரை(1992)
14.இல்லறமே நல்லறம்(1992)
15.பாரதி-பாரதிதாசன் படைப்புக்கலை(1992) ப.ஆ
16.தமிழ் உலா1+2 (1993)
17.சிற்பி தரும் ஆத்திசூடி(1993)
18.வண்ணப்பூக்கள்(1994)சிறுவர் நூல்
19.அலையும் சுவடும்(1994) கட்டுரைகள்
20.இறகு(1996)கவிதைகள்
21.சிற்பியின் கவிதை வானம்(1996)கவிதைகள்
22.மின்னல் கீற்று(1996) கட்டுரைகள்
23.சிற்பியின் கட்டுரைகள்(1996)
24.அக்கினிசாட்சி(1996) மொழிபெயர்ப்பு நாவல்
25.A Noon in Summer(1996) சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு
26.பாரதி என்றொரு மானுடன்(1997)
27.ஒரு கிராமத்து நதி(1998) கவிதைகள்
28.சச்சிதானந்தன் கவிதைகள்(1998)மொழிபெயர்ப்பு
29.மருத வரை உலா(1998)ப.ஆ.
30.நாவரசு(1998)
31.இராமாநுசர் வரலாறு(1999)வா.வ.
32.பூஜ்யங்களின் சங்கிலி(1999)கவிதைகள்
33.பெரியசாமித் தூரன்(199) வா.வ.
34.பாரத ரத்தினம் சி.சுப்பிரமணியம்(1999)வ.வ
35.திருப்பாவை உரை(1999)
36.ஒரு சங்கீதம் போல(1999)
37.ஆர்.சண்முகசுந்தரம்(2000) வா.வ
38.பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு(2001)
39.உஜ்ஜயினி(2001)மொ.பெ.
40.அருட்பா அமுதம்(2001)
41.திருக்குறள் சிற்பி உரை(2001)
42.படைப்பும் பார்வையும்(2001)
43.கவிதை மீண்டும் வரும்(2001)
44.பாரதியார் கட்டுரைகள்(2002)
45.பாரதி கைதி எண் 253(2002)
46.கம்பனில் மானுடம்(2002)
47.சே.ப.நரசிம்மலு நாயுடு(2003)
48.கவிதை நேரங்கள்(2003)
49.மகாகவி(2003)
50.நேற்றுப் பெய்த மழை(2003)
51.மூடுபனி(2003)
52.காற்று வரைந்த ஓவியம்(2005)
53.வாரணாசி(2005)மொழிபெயர்ப்பு
54.சிற்பி கவிதைப் பயணங்கள்(2005)
55.தேவயானி(2005)கவிதைகள்
56.மகாகவி பாரதியார்(2006)
57.மண்ணில் தெரியுது வானம்(2006)ப.ஆ.
58.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை(2006)
59.கொங்கு களஞ்சியம்(2006)
60.மகாத்மா(2006)கவிதைகள்
61.சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்(2006)மொ.பெ.
62.தொண்டில் கனிந்த தூரன்(2006)

        http://muelangovan.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D



    இக்பால் எழுதிய சிற்பி பற்றி திறனாய்வுக் கட்டுரை
தமிழ் இணையப் பல்கலைக் கழகப் பாடப்பகுதி சார்ந்தது

4.2 கவிதை பற்றிய சிற்பியின் கொள்கை

  
     நண்பர்களே, பாரதிக்குப் பின் மரபுக் கவிதை வடிவத்தில் பலர் கவிதை எழுதினர். புதுமையை விரும்பிய சிலர் யாப்பு இலக்கணத்தைப் பின்பற்றாமல் ‘புதுக்கவிதை’ எழுதினர். இந்த இரு பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு இடையில் கருத்துப் போர் நிகழ்ந்து வந்தது, இந்தச் செய்திகளை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

    * வானம்பாடி இயக்கமும் எழுத்து இயக்கமும்

  
     கவிதை பழையதோ புதியதோ, அது வாழ்க்கையின் பிரச்சினைகளை, மக்களின் சிக்கல்களை முன் நிறுத்த வேண்டும் என்பதே முக்கியம் என்ற ஒரு புதிய எழுச்சி பிறந்தது. இவ்வாறு சமுதாய நலன்களுக்காக எழுத முனைந்த சிலர் ஒன்று சேர்ந்தனர். ‘மானுடம் பாடும் வானம்பாடிகள்’ என்று தங்களை அழைத்துக் கொண்டனர். வானம்பாடி என்ற புதுக்கவிதைச் சிற்றிதழைத் (சிறு பத்திரிகை) தொடங்கினர். வானம்பாடி இயக்கம் தோன்றவும் வளரவும் காரணமாக இருந்தவர்களுள் சிற்பி முன் இடம் பெறுகிறார். ஏற்கனவே மரபு வழியில் எழுதி வந்தவர்களும் புதிதாக எழுதத் தொடங்கியவர்களும் இயக்கத்தில் இணைந்தனர். இந்த இதழில் புதுக்கவிதை வடிவத்தில் (அதாவது, மரபான யாப்பு இலக்கணத்தைத் துறந்து) எழுதினர்.

     ந.பிச்சமூர்த்தி வழியில் புதுக்கவிதை படைத்தவர்களின் இதழ் எழுத்து என்பது. இந்த எழுத்து இதழ்சார்ந்த புதுக்கவிதை இயக்கத்தினர் ‘வானம்பாடி’ இயக்கக் கவிதைகளைப் புதுக்கவிதை என்றே ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல மார்க்சியச் சார்புள்ள வானம்பாடிப் படைப்பாளிகள் ‘எழுத்து’ வழியிலான கவிதைகளை ஏற்பதும் இல்லை.

    * சிற்பி - மரபும் புதுமையும்

  
     தம் இறகு என்னும் நூலில் ‘என்னுரை’ என்ற முன்னுரையில் சிற்பி கீழ்க் குறிப்பிடுமாறு எழுதுகிறார் :

     “எழுத்து இதழும் வானம்பாடி இயக்கமும் வெவ்வேறு திசைகளில் கவிதையை இழுக்க முனைந்தாலும், அந்தத் தர்க்கத்துக்குள் நானும் என் கவிதையும் தத்தளித்து ஒருவாறு கரை ஏறுகிறோம்.

     பரிசோதனைகளைப் பாராட்டுகிற அதே வேளையில் மூச்சுப் பிடித்துக் கவிதைகளைப் படிக்க வேண்டிய கொடுமையை நான் நிராகரிக்கிறேன். (அதாவது, புரிந்துகொள்ளச் சிரமப்படுத்தும் கவிதைகளை ஒதுக்குவதாகக் கூறுகிறார்)

     ‘செத்த உடல்புதைத்துச் சித்திரங்கள் மேலெழுதும்’ ஊறுகாய்க் கவிதைப் பாணியும் (இக்காலத்துக்குப் பொருந்தாத பழமைகளை அலங்காரம் செய்து பாராட்டித் திரியும் போக்கு) எனக்கு உவப்பூட்டுவதாய் இல்லை. சொந்தக் கவிதைகளை எழுதாமல் அன்னிய வாசனைகளுக்கு மயங்கும் நவீனத்துவங்களும் எனக்குச் சம்மதமில்லை.

     நான் மரபின் பிள்ளை, புதுமையின் தோழன். என்களம் -என்மண். என் பாத்திரங்கள் - என் மனிதர்கள் என் பின்புலம் - தமிழ்இலக்கியம். மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர் மட்டுமே !”.

     இவ்வாறு, சிற்பிக்குத் தம் எழுத்துக்கான பாதை எது என்ற தெளிவான கோட்பாடு இருக்கிறது. இதைத்தான் இந்த ‘என்னுரை’ குழப்பம் இன்றி உணர்த்துகிறது.

     இவரது கவிதைகளின் வாடாத புதுமைக்கும், தெளிந்த ஓட்டத்துக்கும் இந்தத் தெளிவே காரணமாக நிற்கிறது.

    * கவிதை என்ன செய்ய வேண்டும்?

  
     ‘புன்னகை பூக்கும் பூனைகள்’ - நூலின் முன்னுரையாக, சிற்பி கவிதை பற்றிக் கவிதை எழுதுகிறார்-

எழுத்து
ஆன்மாவின் ரத்தம்

கவிதைகள்
காலத்தின் உதடுகள்

தகிடுதத்தங்களுக்கு
நகக்கண் ஊசி

வடக்கும் தெற்கும்
மேற்கும் கிழக்கும்
பேதமாய்ப் பாரோம் !

யாம் திசைகளை விழுங்கும்
திகம்பர கவிகள்

(ஆன்மா = உயிர் ; தகிடுதத்தம் = பொய்புரட்டுகள் ; திகம்பர கவிகள் = திசைகளையே ஆடையாக உடுத்த கவிகள் - இந்தப் பெயருடன் தெலுங்கில் தோன்றிய புரட்சிக் கவிதை இயக்கம்)

     கவிதை கவிஞனுடைய ஆன்மாவின் உயிர்ப்பாக (ரத்தமாக) இயங்க வேண்டும் ; காலத்தின் மாற்றங்களைப் பிரதிபலிக்க வேண்டும் ; காலத்தின் தேவைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டும்; பொய் புரட்டுகளின் நகக்கண்களில் ஊசியாய் ஏறித் தண்டிக்க வேண்டும். இனம், மொழி, தேச எல்லைகள் தாண்டிப் பொது மானிடத்தை மேம்படுத்த வேண்டும். இவையே கவிதையின் பணி என்கிறார் சிற்பி.

     மேலே குறிப்பிட்ட வழியில் சிற்பியின் இலக்கியப் படைப்புக் கொள்கை அமைந்துள்ளது. இதனால் இவரது கவிதைகள் தம் மண்ணின் மணத்தைக் கொண்டு உள்ளன. தம் மக்களின் பண்பாட்டையும், மரபு சார்ந்த கலைச் செழிப்பையும் முழுமையாக ஏந்திப் பிறக்கின்றன. அதே வேளையில் உலகின் எல்லாத் திசைகளில் இருந்தும் புறப்பட்டு வரும் புதுமைகளை ஏற்கின்றன. உலகப் புதுமையோடு, தமிழ்ப் புலமை கைகோத்து நடக்கிறது. இதுவே சிற்பியின் படைப்புவழி.

     வயிற்றுப் பிழைப்புக்காகத் தெருவில் நடக்கும் ‘சின்ன சர்க்கஸில்’ - தன் மீது ஏறி நிற்கும் தன் தந்தையின் சுமையைத் தாங்கிக் கிடக்கிறான் ஒரு சின்னஞ் சிறுவன். இவனும் சிற்பியின் கவிதையில் நாயகன் - பாடுபொருள் - ஆகிறான். கணினி யுகத்தின் கண்டு பிடிப்பான, கண்ணீர் வடிக்கத் தெரியாத, இயந்திர மனிதனும் (ரோபோ) கவிதைப் பொருள் ஆகிறான்.

     சிற்பி மண்ணில் நின்று நிலவைப் பாடும் பழங்கவிஞராகவும் இருக்கிறார்; அப்பாட்டிலும் புதுமை சிரிக்கிறது. நிலவில் ஏறி நின்று மண்ணைப் பார்க்கும் புதுக்கவிஞராகவும் இருக்கிறார்; அந்தப் பார்வையில் என்றும் மாறாத மனிதப் பண்பின் மரபுப் பழமை வேரோடி இருக்கிறது. அதில் தமிழனின் வழிவழி வந்த பண்பாட்டு மரபு தனித்தன்மையோடு மலர்ந்து மணக்கிறது.

4.3 சிற்பியின் கவிதைகள்
    
     கல், மரம் இவற்றை உளியால் செதுக்கி அழகிய சிலைகளை வடிப்பவனைச் சிற்பி என்கிறோம். மண், பாரீஸ் பிளாஸ்ட்டர் போன்ற குழைவுப் பொருள்களால் அழகான உருவங்களைச் செய்பவனையும் சிற்பி என்போம்.

     சிற்பக் கலை என்பதே தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற பகுதிகளைச் செதுக்கித் தள்ளுவது தானே? கவிஞன் என்னும் சொற்சிற்பி படைக்கும் உலகம் மிக அழகாக இருக்கிறது. மிகச் சரியானதாக இருக்கிறது. குறைகள் அற்றதாக இருக்கிறது. உண்மை உலகம் தன் குறைகளைப் பார்த்துப் பார்த்து நீக்கிக் கொள்ள வழிகாட்டும் ஒரு ‘மாதிரி’ உலகமாக ஆகிவிடுகிறது.

     கவிஞர் சிற்பி, அழகு உணர்ச்சியும், உயர்ந்த ஒழுக்கமும், தூய்மையும், மனித நேயமும், சொல்லை ஆளும் வல்லமையும் படைத்த நல்ல மனிதர். இதனால் இவர் படைக்கும் உலகம் குறைகள் இல்லாத தூய உலகமாய் இருக்கிறது. அதனுள் நுழையும் நமது குறைகளையும் நீக்குகின்ற மாய உலகமாய் இருக்கிறது. அதனுள் நுழைவோம் வாருங்கள்.


4.3.1 மனித நேயத்தின் சிறப்பு
    
     அழகு எதில் இருக்கிறது?

     முன்னோர்கள் கவிதைக்கு இலக்கண மரபு வகுத்தது போல், அழகுக்கும் இலக்கணம் வகுத்து வைத்து விட்டனர்.



    * அழகிய பெண்

    
     அவளுடைய உடல் அழகை முடிமுதல் அடிவரை வருணனை செய்வது கவிஞர்களின் திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு. அவள் உடல் மலர்போல் மெல்லியது ; பொன்போல் சிவந்த நிறம் கொண்டது; நிலாமுகம் ; தாமரை முகம் ; பிறைநெற்றி ; கயல் விழிகள்; முத்துப் பற்கள்; பவள இதழ் ; மேகம் போன்ற கூந்தல்; மிக மெல்லிய இடை ; நூலை விட இளைத்த அந்த இடை தலையில் சூடும் ஒரு பூவைக் கூடச் சுமையாக உணரும் ; அந்தப் பூவில் தேன் உண்ண வரும் வண்டின் சிறகு அசையும் போது வீசும் சிறு காற்றைக் கூடப் புயல்போல் உணர்ந்து தாங்காமல் தளரும் !

     அவளது பாதங்கள்தாம் எவ்வளவு மென்மை !

     உலகிலேயே மிக மெல்லியவை அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் மெல்லிய இறகும். அவை பட்டால் கூட அவள் பாதங்கள் நெருஞ்சி முள் தைத்தது போலப் புண்பட்டு இரத்தம் வடிக்குமாம் !

     இந்த வகையான கற்பனைகள், கருத்துகள் எதைக் காட்டுகின்றன? சிறிது சிந்தியுங்கள். ஆண், தன் ஆசையையே பெண்ணின் அழகாகக் காண்கிறான். பெண்ணைப் போகப் பொருளாகக் காண்கிறான். இந்த இலக்கணங்கள் அமையாத பெண், மரபான பார்வையில் அழகி இல்லை.

     மனிதன் செல்வ வளத்தில் வளர வளர அவனுக்குள் ஒரு பணக்காரத்தனம் வந்துவிடுகிறது. அது அவனது கருத்துகளிலும் படிந்து விடுகிறது. பொருளாதாரத்தில், சாதிப் பிறப்பில், நிறத்தில் தனக்குக் கீழே தங்கிவிட்ட எவரையும் தாழ்வாக எண்ணுகிறான். இதை ‘மேட்டுக்குடிக் கருத்தாக்கம்’ என்பர்.

     நண்பர்களே, அழகியல் பற்றிய ‘மேட்டுக்குடிக் கருத்தாக்கம்' தான் மேலே நாம் கண்ட ‘அழகிய பெண்’ பற்றிய கருத்தும். இந்தத் தவறான கருத்தாக்கத்தை உடைத்து, உண்மையான அழகு எது என்று சமூகத்துக்குக் காட்ட வேண்டும். சிற்பி அதைத் தம் கவிதையில் செய்கிறார்.



    * உண்மையான அழகு

    


     கூலிக்காரி (சிரித்தமுத்துக்கள்) கவிதையைப் படியுங்கள்.

     கூலிக்காரி லெட்சுமி கட்டட வேலை செய்யும் சிற்றாள். பழைய துணியைச் சுருட்டித் தலையில் வைத்து, அதன்மேல் இரும்புச் சட்டியை வைத்திருக்கிறாள். அதில் நிறையக் கனமான கல்லும் மண்ணும். தாங்க முடியாத பசியைத் தாங்க உணவு வேண்டும். அதைத் தேட உழைப்பவள் அவள் ; அதனால் அவளது ‘இடை’ இந்தக் கனமான சுமையை நாள் முழுதும் தாங்கும் வன்மையான இடை.

     கால் கடுக்கிறதே என்று சில நிமிடங்கள் ஓய்ந்து நின்றாலும் கொத்தனார் திட்டுவார். அதனால் ஓய்வே இல்லாமல் அவளது பாதங்கள் காரைச் சுண்ணாம்பிலும் கல்லிலும் நடக்கும். கொப்புளம் கண்டாலும் தாங்கிக் கொள்ளும்.

     கறுத்த உடல்தான். ஒரு சிறு தங்கத் தோடு தவிர உடம்பில் அலங்கார அணிமணிகள் இல்லை. தலையில் பூக்கூட இல்லை, புழுதிதான். இவளிடம் தான் உண்மை அழகு சிரிக்கிறது. அழகையே படைக்கும் உழைப்பின் அழகு அது. சிற்பி இதைக் காண்கிறார். நமக்குக் காட்டுகிறார் :

இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல்
     தெருப் புழுதியின் பூச்சு - கொஞ்சம்
இங்கும் அங்கும் பார்த்து நின்றால்
     கொத்தனாரின் ஏச்சு !

பார்வைக் கணைகள் பட்டுக் கிழிந்த
     பழைய ரவிக்கைக் கந்தல் - அவள்
வேர்வை மணக்கும் மார்பின் சரிவை
     மூடும் சேலைப் பந்தல்
  
துணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த
     தோட்டில் வறுமை சிரிக்கும் - அவள்
முணுமுணுத்திடும் தெம்மாங்கு இசைக்கு
     முத்தமிழ் முந்தி விரிக்கும்
இழைத்த கறுப்பில் குழைத்த மேனி
     லெட்சுமி சிற்றாள் கூலி - அவள்
உழைக்கும் கரத்தைப் பற்றிடும் காளை
     உண்மையில் புண்ணிய சாலி !

     வறுமையால் கிழிந்து பழந்துணி ஆகிவிட்டது அவளது சட்டை. அந்தக் கிழிசல்கள் காமப் பார்வை பார்ப்பவர்களின் பார்வை அம்புகளால் ஏற்பட்டவை என்கிறார். ஓயாத வேலையின் இடையிலும் சேலையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் அவளது மான உணர்வைப் போற்றுகிறார்.

     பெயர் இலட்சுமி, திருமகள். மேட்டுக்குடிக் கருத்தாக்கத்தில் செல்வச் செழுமைக்குக் கடவுள். இவளோ, வறுமையின் வடிவமாக இருக்கிறாள். ஒரு முரண் அழகு. சிற்பியின் மனித நேயக் கருத்தாக்கத்தில் இவள்தான் திருவின் செல்வி ; இவள்தான் அழகி.

     இந்தக் கூலிக்காரி வறுமையைக் கண்டு அழும் கோழை அல்ல. அவளது சின்னத் தோட்டில் வறுமை சிரிக்கிறது. இந்த வறுமையின் செல்வி - இலட்சுமி முணுமுணுக்கும் தெம்மாங்குப் பாட்டின் இனிமையைப் பிச்சையாகக் கேட்டு,இயல், இசை, நாடகம் என்னும் மரபான முத்தமிழும் முந்தானையை விரிக்கின்றன. இது, ‘புதுக்கவிதை என்பது என்ன?’ என்ற கேள்விக்குத் தக்க விடையாகவும் அமைகிறதல்லவா?

     கடவுளை அடைபவன் புண்ணியசாலி அல்ல. இவள் காதலை அடைபவன்தான் புண்ணியசாலி என்கிறார் சிற்பி. உழைக்கும் மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார். இதுதான் சிற்பியின் அழகியல்.

     “மரபு - இலக்கணம் கற்றவன் ; இலக்கியம் அறிந்தவன் நான். எனவே இலக்கிய உலகமே எனக்குத்தான் உரிமை” என்பதும் கூட ஒருவகை மேட்டுக்குடிக் கருத்தாக்கம்தான். இலக்கியத்தை மக்களிடம் மீட்டு வருவதற்கு, இதை உடைக்க வேண்டும். புதுக்கவிதை இதைத்தான் செய்கிறது.



    * சிற்பியின் புரட்சி

    
     எனவே புதுக்கவிதை என்பது மொழியின் வரம்பை, கட்டுப்பாட்டை உடைப்பது அல்ல. மொழிக்குள் இயங்கும் மேட்டுக்குடி மனப்போக்கை உடைப்பதுதான்.

     இந்தப் புரட்சியை ஒரு மரபுக் கவிதையைக் கொண்டு செய்கிறார் சிற்பி. மேற்காட்டிய கவிதை, சந்தப் பாட்டாக, யாப்பு வடிவில் இருந்தாலும் புதிய பார்வையால், புதுக்கவிதை என்ற தகுதி பெறுகிறது.



    * கவிஞரின் தாஜ்மகால்

    


     தாஜ்மகால், ஒளிப்பறவை என்னும் நூலில் உள்ள அழகிய கவிதை. தாஜ்மகாலை உலகத்தின் ஏழாவது அதிசயம் என்பர். அது காதலின் அழகுச் சின்னம். உலகக் கவிஞர்கள் பலரும் அதைக் கவிதைகளால் அலங்கரித்து உள்ளனர். சிற்பியும் தமிழில் புனைந்து பாடுகிறார் :

வாடாத வெள்ளைத் தாமரை
மேகம் தொட்ட மோக மொட்டு
பால்இடைக் குளிக்கும் பளிங்கு மண்டபம்.....
ஆசையின் மடியில் ஷாஜஹான்
அள்ளி இறைத்த வெள்ளிக் காசு
யமுனையின்,
நீலக் கூந்தலில் நிகர்இல்லா வைரம்......

     எனப் பலவாறு உருவகங்களை அடுக்கிப் பாராட்டுகிறார். சட்டென்று உலகின் இருப்பு (எதார்த்தம்) நிலைக்குப் பார்வையைத் திருப்புகிறார். பெரும் செல்வர்க்கு மட்டும்தான் காதல் உரிமையா? கலைகள் உடைமையா? தாமும் தாஜ்மகால் கட்டியதுண்டே ! ஷாஜஹானின் தாஜ்மகாலை விடப் பன்மடங்கு அழகான தமது தாஜ்மகாலை நினைவு கூர்கிறார்.

ஓ ! நான் காதலிக்கு மனதில்
கட்டி முடித்ததும்
மாது சலித்ததும்
நானே இடித்ததும்
இதனைக் காட்டிலும்
மதுரக் கோபுரம்
இதனைக் காட்டிலும்
அதிசயக் காவியம்

     (பால்இடைக் குளிக்கும் = நிலவின் பால்போன்ற ஒளியில் குளிக்கும்; மாது சலித்தது = பெண் தனக்குப் பிடிக்கவில்லை என்று ஏற்க மறுத்தது; நிகர்இல்லா = ஒப்பு இல்லாத)

     ‘மனத்தில் இதைவிட இனிமையாய், அழகாய்க் கட்டினேன். காதலிக்குப் பிடிக்கவில்லை. இடித்து விட்டேன்’ என்று சொல்கிறார். என் காதல் எதையும் விட உயர்ந்தது ; ‘என்னால் முடியும்’ என்னும் தன்னம்பிக்கை அதையும்விட உயர்ந்தது என உணர்த்துகிறார். இயலாதவன் செய்யும் கற்பனையை மனக்கோட்டை என்பார்கள். அந்த மரபுத் தொடரை அர்த்தம் அற்றதாய் ஆக்குகிறார். மனக்கோட்டைதான் மனத்தின் காதல் விரிவை, கற்பனை ஒளியை உண்மையாய்க் காட்டுகிறது. ஒரு புதுமை பிறக்கிறது.


4.3.2 இயற்கை
    
     இயற்கைதான் அனைத்துக்கும் தாய். அவளுக்கு உள்ளிருந்து பிறந்து அவள் மடியிலேயே வளர்ந்தவன் மனிதன். வளர்ந்த போது ‘செயற்கை’ என்ற பெண்ணின் காதலுக்குள் தள்ளப்பட்டான். தாயைப் புறக்கணித்தான். தன்னையும் சூழலையும் கெடுத்துக் கொண்டான். உலகில் இன்று இயற்கையின் மாறுபாட்டால் எத்தனையோ தொல்லைகள். இப்போது சுற்றுச்சூழல் பற்றிக் காலம் கடந்த பின் சிந்திக்கிறான். அதைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பற்றிப் பல மேடைகளிலும் பேசப்படுகிறது. இயக்கங்கள் நடத்தப் படுகின்றன.



    * கவிஞனும் இயற்கையும்

    


     கவிஞன் என்றும் இயற்கையின் குழந்தைதான். ஒரு பூ உதிர்ந்தால் அவன் நெஞ்சுக்குள் பூகம்பம் ஏற்படுகிறது. ஒரு மரம் வெட்டப்பட்டால் அவனது ஆன்மாவில் இரத்தம் கொட்டுகிறது.

     சிற்பியின் இறகு நூலில் உள்ள இறகு என்னும் கவிதையைப் பாருங்கள்.

பார்த்ததே இல்லை
எனினும்
கேட்டதுண்டு
காலம் இல்லை நேரம் இல்லை
அந்திகளில் கருக்கு இருட்டில்
நண்பகலில் மாலைகளில்
வேளை இன்னது என்றில்லை
மெய்சிலிர்க்க வைத்த குரல்.....

கோடைகளில் கொப்பளித்து
மழைக்குப் பொத்தல் குடைஆகும்
என்வீட்டின் மேற்குப் புறத்தில்
இன்னொருவர் நிலத்தில்
ஒரு பச்சைப் பிரளயம்போல்
நிற்கும் வேப்ப மரம்

என் கூரையின்மேல் நிழல்தூவும்
குளிர்காற்றைத் தூதுவிடும்
சிலபோது
மனதைக் கவ்வும் ஒரு மாயமாய்
ஏகாந்தப் புல்லாங் குழலாய்
இலை அடர்த்திக்கு உள்ளிருந்து
கூவி இழுக்கும்
ஒரு குயிலின் குரல் தூண்டில் !

     மகளுக்குத் தலைசீவிப் பேன்பார்க்க, மகனுக்குப் பாடம் சொல்ல, கதை சொல்லிச் சோறு ஊட்ட, அக்கம் பக்கத்துப் பெண்களுடன் ஊர்ச் செய்தி பேச - இவர் மனைவிக்கு இந்த மர நிழல்தான் உரிமையான தாய்வீடு. கவிஞரின் பாட்டுக்குக் குடியிருப்பு.



    * பிள்ளைகளின் அழுகை

    
     வெளியூர் போனார். மூன்று நாட்கள் பயணம் முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் துயரமான சூழல். பிள்ளைகள் அழுகின்றன. “நிலத்துக் காரங்க வெட்டித் தள்ளிட்டாங்க”. செய்தி கேட்டுத் துடிக்கிறார்.

பதைக்கப் பதைக்க ஓடினேன்
பச்சைச் சமுத்திரம்
அலைபாய்ந்த இடத்தில்
வெட்டவெளி, வெறும் பரப்பு

என்நிழல் என்உயிர்க்காற்று
என்ஆன்ம சங்கீதம்
சுள்ளிகள் உலர்ந்த இலைகள்
மரத்துணுக்குகள் .......
வெட்டப்பட்ட அடிமரம்
பூமியின் காயமாய்
விரிசல் விட்டுக் கிடந்தது
  
பாழ்வெளியில் அதன்
பக்கத்தில் உட்கார்ந்தேன்
எங்கிருந்தோ ஓடிவந்த மகள்
“இதைப் பாருங்கப்பா”
என்று கையில் கொடுத்தாள்

கருமை பளபளக்கப்
பழுப்பு அலைபாயும்
ஓர் இறகு

     இக்கவிதையைப் படித்து முடித்ததும், நம் மனம் கசிகிறது.

     ஒரு மரம் செத்துவிட்டது. அதற்கு அழும் கவிக்குடும்பத்தோடு நாமும் சேர்கிறோம், துக்கம் கொண்டாட !



    * மரமா செத்தது?

    
     ஒரு மரம் மட்டுமா செத்தது? ஒரு நிழல் செத்தது. குளிர்ச்சி செத்தது. மனிதன் பறவை என்று பேதம் பார்க்காத ஓர் இயற்கை வீடு செத்தது. தூய்மையான உயிர்க்காற்றை வழங்கிவந்த மூச்சுப்பை செத்தது. கண்களில் குளிர் அலைவீசிய பசுமைக் கடல் செத்தது. அமர்ந்து பாட்டெழுதும் ஒரு கலைக்கூடம் செத்தது. தன் மகனான கவிஞனுக்குத் துன்ப நேரங்களில் ஆறுதல் தர ‘அன்னை இயற்கை’ வைத்திருந்த இசை மேடை செத்தது.

     இதனால், கவிஞரின் கண்களுக்கு மரம் இருந்த இடம் எப்படித் தோற்றம் தருகிறது பாருங்கள் :

     ஒரு பச்சைக் கடல் இருந்து, காய்ந்து உலர்ந்து ஆவியாகிவிட்டது; அதன்பின் மிஞ்சியுள்ள வெறும் மணல் பரப்பாக அந்த இடம் தோன்றுகிறது. அவரது நிழல், உயிர்க்காற்று, ஆன்ம சங்கீதம் இவைதாம் அங்கு உதிர்ந்து சுள்ளிகளாய், உலர்ந்த இலைகளாய், மரத்துண்டுகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன. வெட்டப்பட்ட அடிமரம் பூமியின் புண்ணாய் வலியோடு விரிந்திருக்கிறது.

     மரம் இருந்த இடம் வெட்ட வெளியாகி விட்டது. ஒரு மரத்தின் சாவில் உலகத்தையே பாலை வெளியாக்கும் ‘இயற்கை அழிவு’ காட்டப்பட்டு விட்டது. ஒரு மனித மனத்தின் பதைப்பில் (துடிப்பில்) உலகத்தின் துடிப்பே உணர்த்தப்பட்டு விட்டது.

     இதுதான் கவிதை. ஓர் உயர்ந்த கவிதை இப்படித்தான் உணர்வின் துடிப்பாக இருக்கும்.

     இதில் உச்சமான உணர்வுநிலை எது? நண்பர்களே, கொஞ்சம் உற்று நோக்குங்கள் :

     கவிஞர் அந்தக் குயிலை நேரில் பார்த்துக் கொண்டதில்லை. கேட்கும் புலன் வழியே உணர்வு ஒன்றியது. இயற்கையாய் உருவாகி இருந்தது ஒரு நட்பு, ஒரு நேயம்! அது செத்துவிட்டது.

     மரக்கிளைக் குயிலுக்கும் கவிஞன் என்னும் மானுடக் குயிலுக்கும் இருந்த இசைமயமான நட்பு, அது செத்து விட்டது. எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை பெரிய வருத்தம் ! இன்னும் எத்தனை வருத்தங்கள்......

     இயற்கையை அழித்துக் கொண்டே இருக்கும் தன் சகோதர மனிதனின், ‘மனிதத் தன்மை’ இறந்ததற்கு வருத்தம்.

     குயில் நண்பன் வீடு இழந்ததற்கு வருத்தம்.

     மனிதன் பூமியை எங்கே தள்ளிக் கொண்டு போகிறான்? பயிர் இனம் உயிர் இனம் எல்லாம் அழியும் ‘பாழ்வெளி’ நோக்கியா?



    * குயில் இறகு

    
     குழந்தை, தன் பிஞ்சுக் கையில் எடுத்து வந்த குயில் இறகு, உதிர்ந்த இறகு. மெல்லிய இறகு, ஒரு வலிமையான எச்சரிக்கையின் சின்னம் ஆகிறது. என்ன எச்சரிக்கை?

     உலகம் மட்டும் அல்ல. ஒவ்வோர் உள்ளமும் ஈரம் வற்றி வறண்டு அழியப் போகிறது. மென்மை என்ற தன்மையே வேர்இன்றிக் கருகப் போகிறது. பூமி அன்பில்லாத ஒரு பாலை நிலமாக மாறி வருகிறது. இதை மனிதனுக்கு நினைவூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்க ஓர் அடையாளம், குறியீடு தேவை. குயில் இறகு அந்தக் குறியீடு ஆகிறது.

     குழந்தைகள் நினைவுச் சின்னமாகப் புத்தகத்தில் மயில் இறகை வைப்பார்கள் ; அது ‘குட்டி’ போடுமாம்.

     கவிஞர் சிற்பி புத்தகத்தில் குயில் இறகு வைத்திருக்கிறார், நம் மனத்தில் அது ‘இயற்கையை நேசி’ ‘இயற்கையைப் போற்று’ என்னும் மென்மையான எண்ணங்களைக் குட்டிகளாய் (குஞ்சுகளாய்)ப் பெற்றெடுக்கட்டும் என்று !

4.4 சமூகமும் உலகமும்
  
     நண்பர்களே, இதுவரை படித்த பாடப் பகுதியில் கவிஞர் சிற்பியைப் பற்றியும் அவரது கவிதை நூல்கள் பற்றியும் தகவல் அறிந்தோம். அவரது கவிதைப் படைப்பின் நோக்கம் பற்றியும் தெரிந்து கொண்டோம். அழகு, இயற்கை இவற்றில் சிற்பியின் தனித்தன்மையுடைய பார்வையையும், இவற்றைக் கவிதை ஆக்கும் கலைத்திறனையும் உணர்ந்தோம். இவற்றை உள்ளடக்கமாய்க் கொண்ட கவிதைகளில் உயிர்நிலையாய் இருக்கும் மனித நேயத்தைப் புரிந்து கொண்டோம்.

     இனிவரும் பகுதியில் சமூக நலன், உலக நலன் இவற்றில் சிற்பியின் அக்கறை பற்றி அறிய இருக்கிறோம். எளிமையும் இனிமையும் கொண்ட இவரது இயல்புகள் சொல்லில் வெளிப்படுவதையும் காண இருக்கிறோம்.

     தனி மனிதனோ, பல மனிதர் சேர்ந்த சமூகமோ செல்லும் பாதை தவறாகும் போது குறிப்பாகச் சுட்டி உணர்த்துவார்கள் கவிஞர்கள். புரியாத கூட்டத்தை, சில நேரங்களில் பெருங்குரல் எடுத்துக் கூவியும் நேர்வழிக்கு அழைப்பார்கள். அப்போது அந்தக் கவிதை ‘பிரச்சாரம்’ போல் தோன்றும். ‘தூய இலக்கியம்’ பேசும் கவிதையாளர்கள் இதைக் “கவிதையல்ல, வெற்று முழக்கம்” என்று மட்டம் தட்டுவார்கள். பொறுப்புள்ள நல்ல கவிஞன் இதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. தன் படைப்பில் கவிதைத் தரம் குறைந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் வாழும் மனிதனின் தரம் உயர வேண்டும் என்பதே அவனது நோக்கமாய் இருக்கும். சிற்பி சமூக நலனையே பெரிதாகக் கருதும் சிறந்த கவிஞர்.

4.4.1 சாதிய ஒடுக்கு முறை
  


     நண்பர்களே, இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தை ஒரு தீராத நோயாகப் பிடித்து ஆட்டும் ஒரு கொடுமை பற்றி அறிந்திருப்பீர்கள். பிறப்பால் மனிதனுக்கு உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி என்ற கொடிய நோய் அது. தாழ்வு படுத்தப்பட்ட சாதியிலே பிறந்தவன், எந்த வகையிலும் உயர்ந்து விடாமல் அவனை ஒதுக்கித் தள்ளிப் ‘பிறவி அடிமையாய்’ ஆக்கிவிடும் நோய் அது. தம்மை உயர்ந்தவர்கள் என்று ஆக்கிக் கொண்டவர்களால் ‘தொடுவதற்குக் கூடத் தகுதி அற்றவன்’ என்று அவன் ஒதுக்கப்பட்டு விடுகிறான். ஊருக்கு வெளியே அவன் தன் சாதி மக்களுடன் சேர்ந்துதான் வாழவேண்டும். அந்த இடம் ‘சேரி’ எனப்படும்.

     இந்தத் தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் ஒழிப்பதற்கு மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டனர். தீண்டாமை ஒழிப்புக்கு இங்குக் கடுமையான சட்டங்களும் உள்ளன. ஆனாலும், மக்கள் முழுமையாகத் திருந்தவில்லை.

     சிற்பி்யின் சர்ப்பயாகம் நூலில் உள்ள சிகரங்கள் பொடியாகும் என்னும் கவிதை, சாதிக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்து எழும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதையைச் சொல்கிறது.

     சென்னிமலைக் கவுண்டரின் நிலத்தில் விவசாயக் கூலிகளாய் உழைக்கும் சேரி மக்கள், சக்கிலியர் என்ற தீண்டப்படாத சாதியினர். இவர்களில் உள்ள அழகிய பெண்களின் ‘மானத்துக்கு மயான பூமியாய் இருப்பவர்’ இந்தக் கவுண்டர் ; காமவெறி மட்டும் ‘தீண்டாமை’ பார்ப்பதில்லை.

     அருக்காணி என்னும் சேரிப்பெண் வாய்க்காலில் குளிக்கும்போது கவுண்டரின் காமப் பார்வையில் பட்டுவிடுகிறாள்.அவள் வயல் வரப்பில் தூங்கியபோது அவளது பெண்மையைக் களங்கப்படுத்தி விடுகிறார் பண்ணை முதலாளி.

     இம்முறை மக்கள் அமைதியாய் இருக்கவில்லை. கவுண்டரின் மாளிகைக்குத் திரண்டு போகிறார்கள். திருமணம் பேச வந்ததாய்ச் சொல்கிறார்கள். அவர்,

ஏதுடா பேச்சு ஒருமாதிரியா இருக்கு
உதட்டுக்கு மீறிய பல்லு மாதிரி.....

‘அடங்கிப் போக வேண்டிய அடிமைச்சாதி’ என்று சீறுகிறார்.

எங்க அருக்காணிக்கு நேத்து
நீங்கதாம் புருஷன் ஆயிட்டீங்க.....,
நாமதான் உறவாயிட்டோம்
அதனால ஒங்க மவ காமாட்சியை
எங்க சின்னானுக்குப் பொண்ணு கேட்க...

     மாரி பேசி முடிக்கும் முன் பண்ணையாரின் அடியாட்கள் அவனை அடித்து வீழ்த்தினர். சேரியை வளைத்துத் தாக்கினர். குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். இரவெல்லாம் நெருப்பு எரிந்தது. இதைக் கவிஞர் -

இரவு..... தன்மேனி முழுதும்
கதகதப்பான
மருதாணி இட்டுக் கொண்டது

(மவ = மகள் ; மருதாணி = பெண்களுக்கு, குறிப்பாக மணப் பெண்களுக்குக் கைகால்களில் சிவப்பு நிறம் ஊட்ட அரைத்துப் பூசும் தாவர இலை)

என்று சொல்கிறார்.

     ஊர்முழுக்கக் கலவரம். காலையில் அருக்காணி கொல்லப்பட்டு வாய்க்காலில் பிணமாகக் கிடக்கிறாள்.

குத்துவிளக்குக் குழந்தைகள்
எலும்பும் சாம்பலாய் எரிந்து கொண்டிருந்தன
வீரன், மாரி, ராமனின் பிணங்கள்
வேங்கையின் அடிமரங்களாய்ச் சாய்ந்து கிடந்தன

     ஒடுக்கப்பட்டவர்களும் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். இதைக் கவிஞன்

ஊருக்கு நடுவே வளோளர் வளவில்
இழவுப் பிலாக்கணங்கள் எழுந்துகொண்டு இருந்தன

(வளவு = குடியிருப்பு ; இழவுப் பிலாக்கணம் = சாவு ஒப்பாரி அழுகை)

என்று பாடுகிறார்.

     பணத்தையும், அடியாட்கள் படையையும் வைத்திருக்கும் உயர் சாதியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சேரி மக்கள் சின்னான் தலைமையில் மலை அடிவாரத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார்கள். இது தோல்வி அல்ல. அடுத்துப் பாய்வதற்காக வேங்கை பதுங்குமே, அந்தப் பதுங்கல். இதை வீரம் மிக்க சொற்களால் குறிப்பாகப் புலப்படுத்துகிறார் சிற்பி.

அந்தக் காடு
தேக்குகள் தோள் உயர்த்தும்
வாகைகள் வாள் நிமிர்த்தும்
காடு !

அங்கு நிழல்கள்கூட நிஜங்கள் ஆகும்
புயல்கள் உருவாகும்
குன்றுகள் அந்தப் புயலில் தமது
சிகரங்கள் பொடியாகும் !

(தேக்கு = உறுதிக்கு உவமையாகும் மரம் ; வாகை = வெற்றிப்பூ மலரும் மரம் ; சிகரங்கள் = மலை உச்சிகள்)

     சமூக நீதிக்காகப் பேசும்போது சிற்பி எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்கிறார். ஒடுக்கப்படும் மக்களே தம் உரிமைக்குக் குரல் எழுப்பி எழுதும் இலக்கியம் தலித் இலக்கியம். இது இன்று தமிழில் வளர்ந்து வருகிறது. இதைவிட ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்களே ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுப்பது உயர்ந்தது அல்லவா? இக்கவிதையை வெளியிட்டபோது சிற்பி தம் உறவினர் பலரின் சினத்துக்கும் வெறுப்புக்கும் ஆளானார்.

     பொது உடமைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட இவர் இந்த எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சுவதில்லை. பெண்ணுரிமை, சாதி விடுதலை இவையே இவரது கவிதைகளின் உயிர்மூச்சாய் இருக்கின்றன.

     கேரளத்தில் சாதி ஒடுக்குமுறையை ஒழித்த ஆன்மிகவாதி நாராயண குரு. கடவுள் மறுப்பாளரான சிற்பி, இந்த நாராயண குருவைப் போற்றி வாழ்த்திக் கேரளத்துச் சூரியன் என்ற (‘இறகு’- தொகுப்பு) கவிதை படைத்துள்ளார். நாராயண குருவைப் பற்றி இதைப் போன்ற ஒரு சிறந்த கவிதையை ஒரு மலையாளக் கவிஞர் கூடப் படைத்ததில்லை.

    * பெண்மை வதங்குதல்

  
     வறுமைச் சுரண்டலால் உடலை விற்கும் நிலைக்குத் தள்ளப்படும் பெண் விலைமகள் ஆகிறாள். இந்தப் பெண்ணைக் கொண்டே, இழிந்த இந்தச் சமூகத்தை விமரிசனம் செய்கிறார் சிற்பி. இவரது நெடுங்கவிதைகள் மிகுதியும் இந்தக் கருவையே உள்ளடக்கமாய் உடையவை. தமிழக அரசின் பரிசுபெற்ற மௌன மயக்கங்கள் காவியமும் இந்த வகையில் அமைந்ததுதான்.

4.4.2 புதுஉலகு படைத்தல்
  


     நாய்க்குடை (நூல் : சர்ப்பயாகம்) என்னும் கவிதை உலக நலன் பாடுகிறது. அணுகுண்டு வெடிப்பின் நச்சுப் புகை விரிவை நாய்க்குடைக் காளான் விரிவதாக உருவகம் செய்து பாடுகிறது. பேராசை பிடித்த, அதிகார வெறிகொண்ட வல்லரசுகளை ‘அணுக்குண்டர்களே’ என்று கேலி செய்கிறது. அந்த வெறியர்களைப் பார்த்து ஆணை இடுகிறது :

சூனியக் காரரே விஞ்ஞான தீபத்தில்
மாணிக்கத் தாலியை எரிக்கும் மூடரே !
.....
எங்கள் பாப்பாக்கள் நீலமாய்ப் பிறக்கும்முன்
புல் இதழில் விஷ முத்துக்கள் வியர்க்கும்முன்
செல்வப் பசு மடியில் மரணம் சுரக்கும்முன்
.......
விரிவது நிற்கட்டும்
விரிவது நிற்கட்டும்
ராட்சச
நாய்க்குடைக்
காளான்.......

    ------

ஆய்வுக்கோவை, சிற்பி
சிற்பியின் கவிதைகளில் பெண்ணியம் – சு. திருவரசன்
Posted by ssingamani ⋅ January 30, 2011 ⋅ Leave a Comment

i
Rate This

Quantcast


பெண், பெண்மை, பெண்ணியம் இவற்றுள் முதற்சொல் உயர்திணை உயிர்ப்பொருள். இரண்டாம் சொல் பெண்ணிற்குரிய இயல்புகளைக் குறிக்கும். மூன்றாம் சொல்லுக்கு, ”பெண்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது” என்று ஆங்கில ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம் தரும்.

”பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும். அதன் மூலம் உலகளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று சார்லட்பன்ச் கருதுகின்றார். இந்திய அளவில் பெண்ணிய முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களாய் ராஜாராம் மோகன்ராய், காந்திஜி போன்றோரைச் சுட்டலாம். தமிழக அளவில் ஈ.வெ.ரா., பாரதியார், பாரதிதாசன், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி போன்றோரைக் குறிப்பிடலாம். இக்கட்டுரை, பெண்ணியத்திற்கு எவ்வெவ்வகையில் சிக்கல்கள் உள்ளன. எவரால் உள்ளன என்ற கருத்துகளைச் சிற்பியின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பெண்ணியச் சிந்தனைகளை ஆராய்கின்றது.

சிற்பி – பெண்ணியம்:

திருவள்ளுவர் முதல் பாரதி வரையிலான கண்ணதாசன் உள்ளிட்ட ஆண் கவிஞர்கள் பெண்ணியச் சிந்தனைகளைத் தத்தம் நோக்கில், தத்தம் காலத்திற்கேற்பப் பாடுபொருளாய்க் கொண்டு கவிதைகளைப் படைத்துள்ளனர். இவ்வகையில் தற்கால வாழும் கவிஞர்களுள் சிற்பியும் தம் சிந்தனைகளைப் பெண்ணியம் நோக்கிச் சிறப்பாகவே செலுத்தியுள்ளார். இவருடைய பெண்ணியச் சிந்தனைகளை,

1. இலக்கியப் பெண்ணியம்

2. நடப்பியல் பெண்ணியம்

என்ற பொதுத் தலைப்பில் பல்வேறு உட்தலைப்புகளோடு ஆராயலாம்.

இலக்கியப் பெண்ணியம்:

பெண்கள், கற்பு நிலையில் இன்று மட்டுமல்ல. அன்றும் துன்பப்பட்டிருந்தார்கள் என்பதை அன்றைய இலக்கியப் பெண்களான சீதை, அகலிகை, சகுந்தலை, மேனகை ஆகியோர் மூலம் சிற்பி பாடுகின்றார்.

காப்பிய நாயகனான இராமனுக்கு இருநோக்கு. முனிவர் மனைவி மீது அனுதாபம் தன் மனைவி மீது சந்தேகம் தீர தீக்குளிப்பு. (சி.க.வா. இராமன் பார்வையில் அகலிகை)

என்று இராமன் சீதை மீதுள்ள சந்தேகத்தையும், அகலிகை மீதுள்ள அனுதாபத்தையும் வெளிப்படுத்தியதைப் புலப்படுத்துகின்றார்.

அறியாமல் அகலிகை செய்த

செயலிற்கு முனிவர் கௌசிகன்

கொடுத்த சாபம் கல்லாகக் கடவது

சாப விமோசனம்

இராமனின் காலடி ஏகுதல். (சி.க.வா. அகலிகை இன்னும் காத்திருக்கிறாள்)

என்ற சிற்பியின் வரிகளை, அப்துல் ரகுமானின்,

”இந்திரனாகி

உன்னைக் கற்பழிப்பவர்களும் நாம்தாம்

கௌதமனாகி

உன்னைச் சபிப்பவர்களும் நாம்தாம்”

என்ற வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆண்களால் பெண்ணுக்குண்டான சோதனைகளை உணரலாம். இதுபோல, ஆண்களால் பெண்களுக்குண்டான நிகழ்வுகளை, சிற்பி தம் பெண்ணியச் சிந்தனைகளைப் பின்வருமாறு புலப்படுத்துகின்றார்.

துஷ்யந்தனிடம் தன்னை இழந்த

சகுந்தலை தன்னை யார்

என்பதனை நிலைநாட்டிக்

கொள்ள முடியாமல் தவிப்பது

தொலைத்துவிட்ட மோதிரத்திற்காக (சி.க.வா. ஓ, சகுந்தலா)

இல்லற ஆண்கள் மட்டுமின்றி, முனிவர்கள் கூடப் பெண்ணைக் கருதிய நிலையை, விசுவாமித்திர முனிவர் மேனகையுடன் உல்லாசம் கொண்டு சிறிதுநாள் கழித்து பிரிந்து மீண்டும் தவத்திற்கே சென்று விடுகின்றார்.

நடப்பியல் பெண்ணியம்:

இக்கால நடப்பியற் கூறுகளை அரசியல், கலாச்சாரம், பண்பாடு, சமயம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய நிலைகளில் பெண்ணியச் சிந்தனைகளைச் சிற்பி தம் கவிதைகள் மூலம் காட்டுகின்றார்.

அரசியல் பெண்ணியம்:

சொல்லாலும் செயலாலும் சில போலி அரசியல்வாதிகள் வேறுபட்டிருப்பர். இத்தகையோருள் ஒருவர் பகலெல்லாம் பெண்ணிடம் களித்திருந்து மாலையில் வேடமிடும் விதத்தை.

”இன்றுமாலை ஐந்து மணிக்கு அநாதை, விடுதி திறப்புவிழா

திறப்பாளர் மாண்புமிகு… சிநேகலதா குலுங்கக் குலுங்கச்

சிரித்துக் கொண்டிருக்கிறாள்” (சி.க.வா., சர்ப்பயாகம், தரிசனங்கள்)

என்று கூறுகிறார்.

சமயப் பெண்ணியம்:

சமயப்பணியில் புனிதப் பணியாகக் கருதப்படும் கோவில் தருமகர்த்தாக்கள். கோவிலுக்கு அருகிலுள்ள சத்திரத்தில் கோவில் புனிதத்தோடு சேர்த்துப் பெண்ணின் புனிதத்தையும் கெடுப்பதை,

”தருமகர்த்தா நச்சரிப்பின் கசங்குகின்ற பருவத்தின்

உம்ம்ம் மெலிந்த உம்ம்ம்” (சி.க.வா, தரிசனங்கள், ப.301)

என்று பாடுவதால் அறியலாம்.

பொருளாதாரப் பெண்ணியம்:

வரதட்சணைக் காரணமாகப் பெண்ணினம் பாதிப்படைவதையும், அதற்கு மாமியார் என்னும் பெண்ணே சில இடங்களில் காரணமாகிறாள் என்பதையும்,

”அப்பா கேட்கிறார் நோட்டு அச்சிடும் யந்திரம்

அம்மா கேட்கிறாள் கோலார் சுரங்கம்” (சி.க.வா, தண்டனை, ப.540)

என்ற வரிகளால் அறியலாம்.

சமுதாயப் பெண்ணியம்:

இன்றைய சமுதாயத்திலும் பெண்கள் மலர்கள்தாம்; மணம் வீசுபவர்கள்தாம்; பிறரால் நுகரப்படுபவர்கள்தாம்; மலரால் மலருக்கு – பெண்ணுக்கு எப்பயனும் இல்லைதான்; இத்தகைய மலரைக் கசக்கி நுகர்பவர்கள் ஆண்கள்தான். இவ்வுண்மைகளை,

”பெண்கள் இன்னும் மலர் கொய்யும் பூந்தோட்டம்தான்

ஆண்கள் மட்டும் சதை கிழிக்கும் முள்ளின் வேலி” (சி.க.வா. இராமன் பார்வையில் அகலிகை, ப.529)

என்று சித்தரிக்கிறார்

புரட்சிப் பெண்ணியம்:

விதவைப் பெண்களின் வாழ்வில் விடிவு ஏற்படல் வேண்டும்; சோகத்திற்கு முடிவு ஏற்படல் வேண்டும்; அதாவது அத்தகைய பெண்களை மணக்க ஆண்கள் முன்வரவேண்டும். இக்கருத்துக்களை,

”அது சந்தை, அவளோ மங்கலம் இழந்த மங்கை

சந்தை, வாரம் ஒருமுறை கூடும், அவளுக்கு நேரம் எப்போது மாறும்” (சி.க.வா.விடிவு ப. 242)

என்று படம்பிடிக்கின்றார்.

போலிப் பெண்ணியம்:

போலிகள் பொருள்களில் மட்டுமின்றி மனித உயிர்களிலும் உள்ளன. குடித்த பலர் செய்யும் செய்கையினைப் படித்த சில ஆசிரியர்களும் செய்கின்றனர். கற்க வந்த மாணவியின் கற்பைக் கெடுத்த ஆசிரியன் கற்பரசி கண்ணகியின் காப்பியத்தைக் கற்பிக்கின்றார். மனசாட்சியை மனமறிய மறைத்து விட்டு மனக்குரங்கை அலையவிட்ட இந்த மனிதக் குரங்கைச் சிற்பி அடையாளங் காட்டுகின்றார். பிழை திருத்தம் ஆசிரியப் பணியில் பிழையானவர்களும் வந்துவிட்ட அவலத்தை, போலிகள் கடைபிடிக்கும் போலிப் பெண்ணியத்தை,

”வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்

எட்டாம் வகுப்பில் சிலப்பதிகாரம்” (சி.க.வா, பாடம் தொடர்கிறது. ப.498)

என்று பாடிப் படம் பிடிக்கிறார்.

முடிவுகள்:

சிற்பி தம் பெண்ணியக் கருத்துக்களை இலக்கியப் பெண்ணியம், நடப்பியல் பெண்ணியம் என்ற இருபெருந்தலைப்புகளில் வகைப்படுத்துகின்றார்.

இலக்கியத்தின் மூலம் பெண்ணியக் கருத்துக்களைப் புலப்படுத்த சீதை, அகலிகை, சகுந்தலை, மேனகை போன்ற பெண் பாத்திரங்களையும், இராமன், கௌசிகன், துஷ்யந்தன், விசுவாமித்திரர் போன்ற ஆண் பாத்திரங்களையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நடப்பியலின் மூலம் பெண்ணியக் கருத்துகளைப் புலப்படுத்த அரசியல், சமயம், பொருளாதாரம், சமுதாயம், புரட்சி, போலித்தனம் போன்ற பாடு களங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

இலக்கியப் பெண்ணியத்தில் சந்தேகம், கோபம், தவிப்பு, அனுதாபம், ஆகிய உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

நடப்பியல் பெண்ணியத்தில் காமம், சலனம், மேல்நாட்டுப் பற்று, பொருட்பற்று, வறுமை, பகல்வேடம், போலித்தனம், விதவைமணம், இயலாமை போல்வன மையக் காரணங்களாய் அமைகின்றன.

”பெண்ணிற் பெருந்தக்க யாவுள” (குறள் – 54) என்ற திருவள்ளுவரின் கருத்தை, சிற்பியின் பெண்ணியக் கவிதைகளை ஆய்வு செய்தபின், பெண்ணிற் ”வருந்தக்க யாவுள” என்று கூறத் தோன்றுகிறது.

சிற்பியின் கவிதைகள் பெண்ணியத்தைப் பல்வேறு கோணங்களில் பாடினாலும் எல்லாவற்றிற்கும் முழுப்பொறுப்பாகவும், முதற்பொறுப்பாகவும் ஆணினத்தையே முன்னிலைப்படுத்துகின்றன.

எனவே, ”ஸ்திரீகள் பதவிரதையாக இருக்க வேண்டும் என்று எல்லாருமே விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால் அண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரதத்திலே காட்டுவதில்லை” (பாரதியார், பாரதியார் கட்டுரைகள் ப.103) பாரதியாரின் இக்கூற்றை ஆண்கள் மாற்றிக் காட்டும் வரை சிற்பி ஆண்களுக்காகக் காத்திருக்கக்கூடும். சிற்பியின் விருப்பப்படி ஆண்கள் மாறினால், ஆடவர் பற்றிய சிற்பியின் அபிப்ராயமும் மாறலாம். ஆனால், அதுவரை கவிஞரின் கருத்தைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

எது எவ்வாறாயினும் பெண்களின் எதிரிகளாய் ஆண்களை அறிவிக்கப் பெண்கள் தயங்குகின்றனர். அந்தப் பணியை ஆண்கவிஞர் சிற்பி அச்சமின்றியும், தயக்கமின்றியும் வெளிப்படுத்தியது பெருமையும் உரனும் நிறைந்த அவரது ஆண்மையின் வெளிப்பாடே ஆகும்.

நன்றி: ஆய்வுக்கோவை


« புதுக்கவிதைகளில் நம்பிக்கை – சி. அருண்மொழிச் செல்வி
தொல்காப்பியம் வெளிப்படுத்தும் உயிர்ப் பாகுபாடுகள் – உ. சண்முகசுந்தரி »
Like
Be the first to like this post.
Discussionhttp://thoguppukal.wordpress.com/2011/01/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/

சிற்பியின் மெளன மயக்கங்கள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்பியின் ‘மெளன மயக்கங்கள்’ புதுக்கவிதை வடிவில் வெளிவந்த முதல் (1982) கதைக் கவிதை (Fiction Poetry) என்ற சிறப்பைப் பெறுகிறது. தன் இனிய நண்பனின் அந்தரங்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு இக்கதைக் கவிதையைப் படைத்திருக்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன். பரத்தமை என்ற மாறாத சாபத்தில் இருந்து பெண்குலம் விடுதலை அடைய முடியாதபடி பற்றிப்படர்ந்திருக்கும் இன்றைய சமூகச் சூழலைக் கதைக் கருவாகக் கொண்டு இக்கதை படைக்கப்பட்டிருக்கிறது. இன்று மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும் தீயசக்தியாக உருவெடுத்துப் பரவிவரும் ஆட்கொல்லி நோய் (எயிட்ஸ்) எதிர்ப்புப் பிரச்சாரமாக, சிற்பியின் மெளன பிரச்சாரம் தேவையான ஒன்றாகவே விளங்குகிறது.

கதைக்களம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு பூர்வ ஜென்ம பந்தமானது. வறுமையின் காரணமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணிடம் மயங்கிய ஒருவன் அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறான். ஆனால் அப்பெண் முன்பு ஒரு விபச்சாரியாக இருந்த காரணத்தால் அவளை இச்சமூகம் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டுகிறது. அவளை இழந்த அவன் சமூகத்தில் உள்ள பல அபலைப் பெண்களுக்காகப் போராடும் இலட்சியவானாக வீறுகொண்டு எழுகின்றான். இதுவே இக்கதையின் கருவாக அமைகிறது. இக்கதை ஆண் பெண் இடையிலான மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் காதல் கதையாக இருப்பினும் சமூகத்தில் நிலவும் பாலியல் கொடுமைகள், வறுமை, வேலையில்லாத திண்டாட்டம், பெண் விடுதலை, தேசியம் போன்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை.

கதைச்சுருக்கம்

முதல் தேதி பரபரப்பில் பை கணத்த கனவானாகப் பட்டப் பகலிலும் அலைமோதும் அந்த பட்டினத்தின் இரவுச் சந்தையில் விற்பனைப் பொருளான ஒருத்தியைத் தற்காலிகமாக விலை கொடுத்து வாங்குகிறான் கதைத் தலைவன். அங்கே அவன் வாங்கியது ஒரு பெண்ணின் உடலை அல்ல; அழுக்கின் ஒரு துளி தூசும்படியாத ஓர் ஆத்மாவை. இவ்வாறு பலமுறை அவளை விலை பேசிய அவன் அவளிடம் கொண்டது காதலா? வெறும் இளமைத்திமிரா? என்று கூடத் தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றான். அப்பா இரயில் விபத்தில் இறந்தபோது தன் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்து குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல வறுமை பாதாள விளிம்பில் நின்ற கதையை அவள் கூறக் கேட்ட அவன், அவளை மணம் முடிக்க முடிவெடுக்கிறான். பின்பு தன் தோழன் உதவியுடன் அவளைத் திருமணம் செய்து அமைதியாக வாழுகிறான். ஆனால் இச்சமூகம் அவளை வாழவிடவில்லை. வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டியது. முடிவில் அவள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் நீங்காத நினைவுகளிலிருந்து விடுபடாத அவனிடம் தோழரின் மகள், ‘மல்லீ.....மல்லீ.....’ என்று புலம்புகிறீர்களே! சொல்லுங்கள் உங்களைப் போல பெண்களின் உடலை விலைபேசும் ஆண்களால் தானே விபரீதங்கள். ஒரு மல்லிகாவிற்கு ஊன்றுகோலாக முனைந்தீர்கள். ஆனால் தெரு மல்லிகைகள் எத்தனை ஆயிரம் தெரியுமா? என்று சொல்லம்புளால் துளைக்க மெளனமாகிறான். பிறகு தன் தோழருடன் இணைந்து குறிப்பாய் பெண் விடுதலைக் கிளர்ச்சிகளில், உரிமைப் போர்க்களங்களில் முழங்கும் தொண்டனாக மாறுகிறான்.

கதைப்பின்னல்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும், கற்புக்குக் கடைத்திறந்து நிற்கும் ஒருத்திக்கும், இடையே நடக்கும் உறவினை மையமாகக் கொண்டு கதை நகர்கின்றது. நெகிழ்ந்த சேறும், முரட்டு விதையும் ஒன்றில் ஒன்று உறவு கொண்டதைப் போல அவர்கள் இருவரிடத்தே மலரும் அன்பு முதலில் இளமைத் திமிராய், பின்பு காதலாய் மாறுகிறது. ஒரு கட்டத்தில் ‘அவளைக் காப்பாற்றுவது என் இலட்சியமில்லை. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள அவள் வேண்டும்’ என்னுமளவிற்கு அவளின் களிப்பில் மயங்கிக் கிடக்கிறான் அவன். பிறகு அவன் கொண்ட காதல் சூரியனைப் போல் சுத்தமானதாக மாறுகிறது. இவர்களிடத்தே இருந்த நெருக்கத்தின் இடைவெளியைக் குறைக்க மீண்டும் புயல் வீசுகிறது. புயலில் அடித்து ஒதுங்கியவன் இலட்சிய வீரனாக மாறுவதே கதையின் உச்சமாகத் திகழ்கிறது.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகப் பொறுப்பு உண்டு. சமூகத்தின் ஓர் அங்கமான படைப்பாளி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை முன்வைத்தே தன் படைப்பைப் படைக்கிறான். அவனது படைப்பும் அவன் வாழும் சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருக்கும்; இருக்கக்கூடும். ‘கலை, இலக்கியம் என்பவை மனித சமூகத்தைப் பற்றியதுதான் என்ற கருத்தாக்கம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதிலிருந்தே யதார்த்தவாதம் (யூeழியிஷ்விது) என்ற முறையியல் தோன்றிவிட்டது. கலைக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது (Cognitive). இரண்டு சுற்றுப்புறத்தைப் பிரதிபலிப்பது (Reflective) இதில் சுற்றுப்புறம் என்பது சமூகத்தை மட்டும் தான் குறிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்’ என்ற தோத்தாத்திரியின் கருத்துக் குறிக்கத்தக்கது. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்களும் இதனை முன்னிருத்தியே தமது கட்டுரையில், ‘இக்கால மனிதனின் சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் இடையறாத முயற்சியே என் கவிதை’ (என் எழுத்து பக்.537) என்று குறிப்பிடுகிறார். கவிஞரின் கவிதைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையாகவே அமைகிறது. ‘மெளன மயக்கங்கள்’ என்ற கதையில் தொழில் முறையால் விபச்சாரம் செய்யும் பெண்ணைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் கொடுமைகளைப் பிரதிபலிக்கும் முகமாகப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர்.

சமூக அவலங்கள்

ஒரு பெண் விபச்சாரியாக மாற அக்குடும்பத்தில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையே காரணமாக அமைகிறது. இக்கதையின் தலைவியும் வறுமையின் கரணமாகக் குடும்பத்தின் சுமையைத் தாங்க, விபச்சாரியாக மாறுகிறாள். கவிஞர் ‘அப்பா இரயில் விபத்தில் இறந்த போது தன் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல் வறுமை பாதாள விளிம்பில் நின்றது. அம்மா நகைகளை விற்றாள். அப்புறம் காய்கறி விற்றாள். தலையில் சுமந்து விறகு விற்றாள். பிறகு கற்பை விற்றாள்! எங்களுக்குக் கால் வயிறு நிரம்பியது..... எனக்கு இரட்டைச் சடைபோட்டு ரோஜாப்பூ வைத்துப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தவள் தானே, ஒற்றைச்சடை பின்னி கனகாம்பரம் வைத்து இரவுப் பள்ளிக்குப் போகத் தொடங்கினாள்’ என்ற காரணத்தை விவரிக்கிறார்.

இந்தியத் திருநாட்டில் ‘வறுமை’ தலைவிரித்து ஆடுகிறது. உலக நாடுகளில் இந்தியாவில் தான் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு தான் பட்டினிச்சாவுகள் அதிகம் நடக்கின்றன. ‘ஈ மொய்க்கும் ஓர் ஈயக் குவளை நீட்டிப் பிச்சை கேட்கிறது ஒரு கரம்’ என்று இந்தியாவின் வறுமை நிலைக்காக வருத்தப்படுகிறார்.நம் நாட்டிற்கு உரிய இந்தச் சாபக்கேட்டை அகற்றும் முகமாகக் கவிஞரின் சிந்தனை கவிதைகளில் தெரிகிறது. ‘திரும்பத் திரும்ப நான் பார்க்கவும், கேட்கவும் அறவே விரும்பாதவை இரண்டு. ஒன்று என் வளநாட்டின் தீரா வறுமை மற்றொன்று வேலையில்லாத் திண்டாட்டம்’ என்று குறிப்பிடுவதன் மூலம் கவிஞரின் தேசப்பற்று தெரிகிறது.கதைத் தலைவனின் தோழன் ஓர் இயக்கத்தினைச் சார்ந்து பல போராட்டங்களை நடத்துகிறான், ‘தீபங்களைத் தூக்கியபடி உச்சக் குரலில் வேலை கொடு! எங்களை வாழ விடு’ என்று தோழர் அதன் முன்னிலையில் இருந்து குரல் கொடுப்பதாகக் காட்டுகிறார்.

பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிஞர்கள் வரிசையில் சிற்பி பாலசுப்பிரமணியன் குறிப்பிடத்தக்கவர். ‘பூக்களுக்கு முதுகெலும்பும் இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பும் இல்லை’. எனவே தேடிப்போன ஒவ்வொரு மாளிகையும் விதவிதமான காமவெறிக் கானகமாய்க் காட்சியளிக்கிறது. ஒரு நாள் கூலி வேலைக்குப்போய் இருட்டுச் சந்தில் திரும்பியவளை ஒரு குடிகாரன் வழி மறித்து கற்பழிக்கிறான். அப்போது அவளைக் காப்பாற்ற எந்தப் ‘பேடியும்’ வரவில்லை என்று கவிஞர் பாலியல் கொடுமைகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறார்.

விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் இயல்பாக, ‘ஊருக்கொரு பெயர், நாளுக்கொரு பெயர், ஆளுக்கொரு பெயர், நொடிக்கொரு மதம் மாறுவோம், அடிக்கடி மனம் மாறுவோம்’ என்றும், ‘குவிந்து விரியும் இரப்பர் உதடுகள்’ என்றும் குறிப்பிடுகிறார். விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் அவளை ஒருமுறை பார்க்கச் செல்லும் பொழுது ‘தெரு முனையில் ஒரு பையன் அவன் கையில் ஒரு காகிதம் திணித்தான்... போலீஸ் முற்றுகையில் இடமாற்றம். 17, இராமர் கோவில் தெரு, என்று முரண்தொடையாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆசிரியரின் புலப்பாட்டு உத்தி புலனாகிறது.

கவிஞர் இந்திய நாட்டின் மீது கொண்ட நாட்டுப்பற்றை அவர்தம் கவிதைகளில் காணமுடிகிறது. ‘அன்று குடியரசு நாள், கொடிகள் கம்பத்தின் உச்சியில் படபடத்துத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. பத்திரிக்கைப் பக்கங்களில் இளம் நடிகைகள் சுதந்திர மகிமையை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தனர்’ என்று குறிப்பிடுகிறார். இன்றும் கூடச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் நடிகர், நடிகைகளின் பேட்டிகள் அதிகம் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. தேசியக் கொடியைத் தலைகீழாக ஏற்றும் அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கும் பட்சத்தில் கவிஞரின் தேசப்பற்றுப் போற்றுதற்குரியது. நம்பிக்கையோடு தொடங்கப்படுகிற ஒவ்வொரு பயணமும் நச்சு அழிக்கின்ற யாகங்கள் தொடங்க வேண்டும் என்ற குறிப்புப் பொருள்பட ‘சர்ப்பயாகம்’ என்ற படைப்பையும், இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் படைத்துள்ள பாங்கினையும் அறிய முடிகிறது.

வடிவம்

மரபுக் கவிதைகளின் பிள்ளையான சிற்பி தமிழில் எழுந்த முதல் கதைக்கவிதையான ‘மெளன மயக்கங்கள்’ எனும் புதுமையின் தோழனாகவும் பரிணமிக்கிறார். எண்ணங்களை வெளிப்படுத்த வடிவம் வேண்டும். அந்த வடிவம் எண்ணங்களை எடுத்துச் சொல்லும் பாலமாகத் திகழ வேண்டும். பாரதியார், ‘எளிய நடை, எளிய பதம், எளிதில் அறிந்து கொள்ளும் சந்தம், பொது மக்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்’ (பாஞ்சாலி சபதம் முன்னுரை) என்று குறிப்பிடுகிறார். சிற்பி, பாரதியின் வழிவந்த காரணத்தால், புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஓர் இலக்கிய வடிவம் மற்றொரு இலக்கிய வடிவத்தின் மீது தாக்கம் செலுத்துவது இலக்கிய வளர்ச்சியில் தவிர்க்க இயலாது (சிற்பியின் கட்டுரைகள், பக்.294) என்ற கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது. புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன். எளிய தமிழ், தெளிந்த நீரோட்டமாகக் கவிதை அமைந்துள்ளது.

தாக்கம்

கவிஞர் சிற்பி கோவை நகரப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்கிறார். தன் நண்பனின் அந்தரங்க வாழ்க்கையை இலக்கியமாகப் படைத்திருப்பதால் கவிஞரின் இளமைக்கால அனுபவங்கள் (கையயழுத்து பிரதி நடத்தியது). நினைவுகள் அவர் வாழ்ந்த நகரப் பின்னணி (நெசவுத் தொழில் ஆலைச் சங்கு ஒலி), ஆகியவற்றை இக்கவிதையில் காண முடிகிறது.

அவளின் அழகில் மயங்கிய அவன் உரைக்கும் மொழிகளின் போது சிலப்பதிகாரத்தின் (கோவலன் கூறும் குறியாக் கட்டுரை) தாக்கத்தையும், அவள் ஒருமுறை அவனைச் சந்தித்து விட்டுத் திரும்பும்போது, ‘வந்த சுவடு தெரியாமல் போன காற்றைப் போல அடுத்த கணம் நீ காணாமல் போய்விட்டாய்’ என்று கூறுமிடத்தில் மாங்கனியில் கண்ணதாசனின் (தென்றல் வந்து போனதற்குச் சுவடு ஏது?) தாக்கத்தையும், ‘நான் வானத்தையும் கரு மேகங்களையும் தலையில் சுமந்து கொண்டு அவரை நெருங்கினேன்’ என்று அவன் கூறுமிடத்தில் பாரதிதாசனின் கவிதை வரிகளின் (கடைக்கண் பார்வை காதலியர் காட்டிவிட்டால்...) தாக்கத்தையும் காணமுடிகிறது.

தலைப்புப் பொருத்தம்

ஒரு பெண்ணின் கூடல் இன்பத்தால் மயங்கும் ஓர் இளைஞன் ‘குதிரை மேல் பறக்கும் உன்னை (அவளை) விடாமல் துரத்தித் துரத்தித் தொடர்கிறதே என் இதயப்புரவி. இல்லை, இல்லை நீ ஒரு புதிர். உன்னை என்னால் விடுவிக்கவே முடியவில்லை’ என்று மயங்கிக் கிடக்கிறான். இவ்வாறு மயங்கிக் கிடக்கும் இளைஞர்களை நோக்கிக் கவிஞர், ‘தோழரே நினைவில் வையுங்கள் இரண்டு கண்களில் மயங்கிக் கிடப்பது அல்ல வாழ்க்கை! நான்கு கைகள் ஒரே திசை வழியில் நோக்கி நிற்பதே இலட்சிய வாழ்க்கை’ என்று இறுதியாகக் கூறும் கூற்று இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமைகிறது.

தீர்வை நோக்கிய பயணம்

பாலுணர்வு ததும்பும் கருப்பொருளை மிகுந்த எச்சரிக்கையுடன் தமிழ்க் கவிதையில் எடுத்தாண்ட தனித் தன்மையை மெளனமயக்கங்களில் காண முடிகிறது. காதல் உணர்ச்சியைக் கத்தி முனையில் நடப்பது போல் வெகு கவனத்தோடு கையாண்டிருக்கிறேன் என்று கவிஞர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் தமிழ்த் திறனாய்வாளர்கள் இந்நூலை முறையாக விமர்சிக்கவில்லை என்ற மனக்குறையைத் தன் கவிதை மூலம் வெளிப்படுத்தும் கவிஞர் ‘இன்றும் கூட என் மொழி விமர்சகர்களோடு எனக்கு நேசமும் இல்லை, பாசமும் இல்லை’ (சிற்பியின் கட்டுரைகள், என் எழுத்து, பக்.542) என்று கூறுகிறார். அவளின் மீது கொண்ட தீராக்காதலில் மூழ்கிக் கிடக்கும் அவளை, இன்னுமா தூக்கம்? என்று தோழர் கேட்பது, கவிஞர் உள்ளே ஒரு குறிப்புப் பொருளை வைத்தே கேட்பதாகத் தோன்றுகிறது.

ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் பாடிய பாசுரங்கள் குறிப்பிடத் தக்கவை. ஆண்டாள் தன் தோழிகளை மார்கழி மாதம் அதிகாலையில் துயில் எழுப்பும் நிகழ்வைக் குறிப்புப் பொருளை வைத்தே ஆண்டாளின் துயில் எழுப்பும் பாடல்கள் (5) உள்ளது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் அனைவரையும் ஆன்மீக விழிப்புணர்வு பெறப்பாடியதாகவே ஆண்டாள் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். அதுபோலவே தோழரின் இன்னுமா உறக்கம்? என்ற வினா நம் அனைவரையும் தீர்வை நோக்கிய பயணமாகக் கருதியே இக்கூற்றை வைத்தார் என்ற குறிப்புப் பொருள் புலப்படத் தன் படைப்பைப் படைத்திருப்பதன் மூலம் கவிஞரின் இலட்சியக் கனவு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

Posted by mudalvaa at 10:07
Reactions:    
0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments

http://mudalvaa.blogspot.com/2011/04/1982-fiction-poetry.htmlEditor. Dr. S. Chidambaram ., Mudalvan Publications,No: 50, Jeeva Nagar, Kalingar salai, Karaikudi.. Ethereal template. Powered by Blogge

 June 28, 2010
கவிஞர்.சிற்பி நேர்காணல்-சந்திப்பு:தென்பாண்டியன்

நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் பதிவுகள் தனித்துவமானது. அதன் தோற்றமும் வளர்ச்சியும் தமிழ்க்கவிதையில் புதிய பரிணாமத்தையும் இளங்கவிஞர்களின் பாரம்பரியத்தையும் உருவாக்கியது. இலக்கிய இதழாகத் தொடங்கிய வானம்பாடியை ஒரு கவிதை இயக்கமாக மாற்றியப் பெருமைக்குரியவர்களில் மிக முக்கியமானக் கவியாளுமை ’கவிஞர் சிற்பி’. தனது 50 ஆண்டு கால இலக்கியப் பங்களிப்பில் 60க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திருப்பதோடு தமிழில் இரண்டு சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றிருக்கும் முதல் கவிஞர். ரசனை இலக்கிய இதழின் நேர்காணலுக்காக அவரது இல்லத்தில் சந்தித்த போது கடந்த கால ஞாபகங்களுக்குள் பின்நோக்கிப் பயணித்து வானம்பாடிகள் குறித்தக் கவித்துவமான நினைவுகளையும் சமகால இலக்கிய நிகழ்வுகள் பற்றியப் பதிவுகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.


ரசனை: உங்களது இளமைக்காலம் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

சிற்பி: என்னுடைய குடும்பம் நடுத்தர விவசாயக் குடும்பம். என்னுடைய கிராமத்தில் நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். இரண்டாவது உலக யுத்தம் முடிந்து கொண்டிருந்த நேரம் அது. அதை ஒட்டி பொள்ளாச்சி நகரில் வந்து படிக்க வேண்டும் என்று சொல்லி என்னுடைய அப்பா விரும்பினார். அதனால் நான் 5ம் வகுப்பில் பொள்ளாச்சியில் சேர்ந்தேன். ஆனால் அதை நான் முழுமையாக முடிக்கவில்லை. அந்த படிப்பின் மேல் எனக்கு ஆர்வம் இல்லை அதனால் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி விட்டேன். பிறகு என்னை பல இடங்களில் தேடி ஒரு உறவினர் வீட்டில் கண்டுபிடித்தார்கள். என்னுடைய அப்பா முறையான கல்வி கற்றவர் அல்ல. அதனால் என்னை படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார். அது அவருக்கு ஒரு ஏமாற்றமாக போய் விட்டது. அந்த ஏமாற்றத்தில் அவர் இடிந்து போயிருந்த போது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு சிறு கடைக்காரர் அவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் சொன்னார். கேரளத்தில் ஒரு நல்ல ஆசிரியர் இருக்கிறார். அவரிடம் கொண்டு போய் விட்டால். பையனை உருப்படியாக உருவாக்கி விடுவார் என்று என் தந்தையிடதில் கூறினார். சித்தூர் பக்கத்தில் நல்லேபள்ளி அங்கு சாமியப்ப பிள்ளை என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் தமிழர். அந்த பகுதி தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்ததால் அங்கு அவர் தமிழாசிரியராக பணியாற்றினார். அப்போது அவரிடத்தில் கொண்டு போய் விட்டார்கள். அவர் என்னை பள்ளியில் சேர்ப்பதற்காக தேர்வுக்கெல்லாம் தயார் செய்து பள்ளியில் சேர்த்து விட்டார். நான் பள்ளியில் சேர்ந்த சமயம் அவருக்கு தத்தமங்கலம் என்ற ஊருக்கு மாறுதல் வந்து விட்டது. அங்கேயே என்னையும் அவர் சேர்த்துக் கொண்டார். பிறகு அங்கிருந்துதான் என்னுடைய உயர்நிலைப் படிப்பு வரை படித்தேன். அதனால் என்னுடைய கிராமத்தில் வாழ்ந்த காலம் என்பது மிக சிறிய வயது பையனாக இருந்த போதுதான். அதன் பிறகு நான் வரவும் போகவுமாக இருந்திருக்கிறேனே தவிர நிரந்தரமாக நான் அங்கு இருக்க வாய்ப்பில்லை. நான் பள்ளிக் கல்வி முடித்தவுடன் கல்லூரி படிப்புக்காக திருச்சி போய் விட்டேன். அதனால் திரும்பவும் என் கிராமத்திற்கு போக முடியவில்லை. கிராமத்து வாழ்வை நான் அனுபவித்தேன் என்பது என்னுடைய ஏழு, எட்டாவது வயது வரை மட்டும்தான்.





ரசனை: கல்லூரியில் இளங்கலைப் பட்டதிற்காக எந்தப் பாடத்தைத் தெரிவு செய்தீர்கள்?

சிற்பி: நான் கேரளாவில் படிக்கும் போது தமிழ் ஒரு பாடம் தான் மற்றதெல்லாம் மலையாளத்தில்தான் படித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போது அப்போதெல்லாம் நேரடியாகப் பட்டப்படிப்பிற்கு போக முடியாது இணடர்மிடியட் வகுப்பு இருந்தது. அதனால் இண்டர்மிடியட் வகுப்பில் படிக்கும் போது மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக இயற்கை-விஞ்ஞானம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை படித்தேன். என்னுடைய அப்பா நான் மருத்துவத் தொழிலுக்கு போக வேண்டும் என விரும்பினார். ஆனால் நான் கேரளவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து உடனேயே எனக்கு தமிழ் மீது ஒரு ஆர்வம் இருந்தது. நான் கேரளாவில் படித்த போது தமிழ் சொற்பொழிவுகளைக் கேட்பதோ தமிழ் புத்தகங்களைப் படிப்பதோ இல்லை. கல்லூரியில் சேர்ந்த பிறகு தமிழ் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. அப்போது திராவிட இயக்கம் வளந்து கொண்டிருந்த காலம். திருச்சி ஒரு மையமாக இருந்தது. அப்போது திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதன் இருந்தார். தொ.பொ.மீ., மா.பொ.சி. போன்றோர்கள் அங்கு சொற்பொழிவாற்ற வந்தார்கள் அதோடு அப்போது இளைஞராக இருந்த கலைஞர் கருணாநிதி தி.மு.க. வின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார். அதனால் அவர் வாரம் தோறும் பொதுக் கூட்டங்களில் பேசுவார். அண்ணாவின் சொற்பொழிவுகளை அங்குதான் கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் கேட்டபோது எனக்கு ஒரு ஆதங்கம் ஏற்பட்டது. இப்படியெல்லாம் பேசவும் படிக்கவும் முடியவில்லை என்ற வருத்தம் கூட இருந்தது எனக்கு, அப்போது அங்கிருந்த தமிழ்ப் பேராசிரியர். அப்துல்கபூர் நாஞ்சில் நாட்டை சேர்ந்தவர். அவர் பேராசிரியர் அன்பழகனுடைய வகுப்புத் தோழர். அவர் வகுப்பெடுக்கும் போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் படித்ததைப் பற்றி ரொம்பப் பெருமையாக பேசுவார். அதைத் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார். அதனால் எனக்கு என் அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக தமிழ் மீது தீராத காதல் ஏற்பட்டது. அதற்கு இசைவாக அங்கு பெரிய புத்தகக் கடைகள் இருந்தன. அங்கு இரண்டு வகையான புத்தகங்கள் என்னைக் கவர்ந்தது. பாரதியின் முழுத் தொகுப்பு, பாரதி பிரசுராலயம் அதை வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்த போது பாரதி இவ்வளவு எழுதியிருக்கிறாரா என்று வியப்பாகயிருந்தது. அதே மாதிரி அப்போது இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவராகப் பாரதிதாசன் இருந்தார். அப்போது அவர்கள் இருவர் கவிதைகளிலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. எனக்குள்ளும் கவிதை எழுத வேண்டும் என்ற துறுதுறுப்பு இருந்துகொண்டிருந்ததால், இவர்கள் இருவர் மீதும் தீராத காதல் இருந்தது. குறிப்பாக பாரதி மேல் தனியான பிரியம் உண்டு. இந்தத் தமிழ் உணர்வும் திராவிட இயக்க உணர்வும் கவிதை உணர்வும் சங்கமித்தது திருச்சியில் இருந்த போதுதான். அதனால் என் அப்பாவுக்குத் தெரியாமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகதில் தமிழ் ஹானர்ஸ் சிறப்பு வகுப்பில் போய்ச் சேர்ந்து விட்டேன். அது என் அப்பாவுக்கு பேரிடியாக இருந்தது. நான் படித்து முடிக்கும் வரை என்னோடு அவர் பேசியது கூட கிடையாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போது எனக்குள் இருந்த திராவிட கருத்தோட்டம் மாறியது. அங்கு என்னுடன் படித்த வகுப்புத் தோழர் சண்முகசுந்தரம் என்பவர் விருதுநகர் பக்கத்துக்காரர். அவர் இடதுசாரி சிந்தனையாளர். அது போல வரலாற்றுத் துறையில் படித்துக் கொண்டிருந்த ராஜகோபால் என்பவரும் பொதுவுடமையாளர். கி.வீரமணி என்னுடைய வகுப்புத் தோழர். அவர் எக்கனாமிக்ஸ் ஹானர்ஸ் படித்துக் கொண்டிருந்தார். நான் தமிழ் ஹானர்ஸ் படித்துக் கொண்டிருந்தேன் இருவரும் பக்கத்துப் பக்கத்து அறையில் தான் இருந்தோம். அப்போது எங்களுக்கு ஆங்கிலம் ஒரு பொதுப் பாடமாக இருந்தது. ஆங்கில வகுப்புக்கு இருவரும் சேர்ந்துதான் போவோம். அதனால் எனது அரசியல் கோட்பாடுகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஜீவாவை அழைத்து வந்து பல்கலைக்கழகத்தில் பேச வைக்க வேண்டும் என்று முயன்றோம். ஆனால் அப்போது திராவிட இயக்கத்தின் எழுச்சியிருந்ததால் பல்கலைக்கழகத்தில் பேச வைக்க இயலவில்லை. அதனால் அருகிலிருந்த திருவேற்களம் அதுதான் இப்போது அண்ணாமலை நகராக மாறியிருக்கிறது. அங்குள்ள ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ள மைதானத்தில் ஜீவாவை பேச வைத்தோம். இந்த மாதிரிதான் என்னுடைய அரசியல் சிந்தனையும் இலக்கிய சிந்தனையும் மாற்றமடைந்தது.

ரசனை: நீங்கள் கவிதை எழுதத்துவங்கிய காலகட்டத்தில் உங்களை பாதித்த படைப்பாளர் யார்?

சிற்பி: நான் கல்லூரியில் படித்த காலத்தில் முதல் இரண்டாண்டுகள் கவிதைகள் ஏதும் எழுதவில்லை. தமிழ்ப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போயிருந்தேனே தவிர கவிதை எழுதக் கூடிய அளவிற்கு இலக்கணம் ஏதும் தெரியாது. என்னோடுப் படித்தவர்கள் எல்லோருமே தமிழ் இலக்கணம் படித்துவிட்டு வந்தவர்கள். நான் அப்போது கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இலக்கண இலக்கியங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். தொல்காப்பியம் வரை படிக்க வேண்டும் ஆனால் அப்போது நன்னூல் கூடத் தெரியாமல் ஓயாது படித்து இலக்கணம் கற்றேன். யாப்பிலக்கணமும் கற்றுக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் கவிதைகள் எழுதச் சொன்னார்கள். அப்போதுதான் கவிதை எழுத முயற்சி செய்தேன். அதைவிட முக்கியமானது எனக்கு ஆசிரியராக இருந்தவர்களில் மு.அண்ணாமலை என்ற கவிஞர் இருந்தார். அப்போது பொன்னி இலக்கிய இதழில் பாரதிதாசன் பரம்பரையினர் என்ற கவிதைப் பட்டியலில் இடம் பெற்றவர் அவர். பாரதிதாசன் கூட இருந்தவர். அவர் தாமரைக் குமரி என்ற கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டிருந்தார். அது மரபுக் கவிதை. அவருடன் தொடர்பிருந்ததால் எனக்கு கவிதை ஆர்வம் தூண்டப்பட்டது. எனது நோட்டுப் புத்தகங்களில் கவிதைகள் எழுதி வைத்திருப்பேன் அது நான் எனக்காக எழுதிக் கொண்டது. அதை மற்றவர்களிடம் படிக்கக்கூடக் கொடுத்ததில்லை. ஒரு முறை என் கவிதைகளை அவரிடம் காட்டினேன். அதை அவர் படித்து விட்டு பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதன் பிறகும் பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. என்னுடைய பழைய தாய்வீடான ஜமால் முகம்மது கல்லூரியின் ஆண்டு மலரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அந்த மலருக்கு ஆசிரியராக இருந்த தமிழ்ப் பேராசிரியர்.அப்துல்கபூர் அண்ணாமலை நகருக்கு வந்திருந்த போது என்னைப் பாராட்டினார். அந்த கவிதை தன்னையும் ஒரு கவிதை எழுதத் தூண்டியதாகவும் தானும் அது போல் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார். அந்தக் கவிதையின் தலைப்பு ‘ஆழ்கடலே கேள்’ என்று ஞாபகம். இதுதான் எனது கன்னி முயற்சி. பொள்ளாச்சிக்கு ஆசிரியராக வந்த பிறகுதான் கவிதைகள் எழுதுதல், கவியரங்குகளில் கலந்து கொள்ளுதல் என்ற முயற்சிகளில் ஈடுபட்டேன். அவைகளை படித்த நண்பர்கள் நன்றாக இருப்பதாக சொன்ன பிறகுதான் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1963ல் ‘நிலவுப்பூ’ என்ற தலைப்பில் எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

என்னை பாதித்தவர்கள் என்றால் அது எப்போதுமே பாரதிதான். பாரதிதாசனோடு நேரடியாக பழகும் வாய்ப்பு இருந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த நேயம் இருந்தது என்ற போதும் என்னவோ ஒரு ஆன்ம நேயம் பாரதி மீதுதான் ஏற்பட்டது. பாரதிதாசனிடம் இருந்ததிலும் உள்ளார்ந்த கவித்துவம் பாரதியிடத்தில் இன்னும் ஓங்கியிருந்ததாக எனக்குப்பட்டது. அடுத்ததாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வியல் இலக்கியங்களில் இருந்துதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் என்னைப் பாதித்தவர் கம்பர். எனது கல்லூரி காலம் என்பது கம்பராமாயனத்தின் முழுமையான பதிப்பு கிடைக்காத காலம். ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் பெரியன் சீனிவாசன் ஒரு பதிப்பு போட்டிருந்தார். அது ஒரு கரடு முரடான பதிப்பு. அதை நண்பர்கள் மூலம் வாங்கி ஒரு பத்து முறையாவது படித்திருப்பேன். அந்த அளவிற்கு அதன் மேல் ஈடுபாடு. இப்போது கேட்டால் கூட கம்பராமாயனத்திலிருந்து ஒராயிரம் பாடல்களை மனப்பாடமாகச் சொல்ல முடியும். அதனால் கம்பனுடைய கற்பனையும் பாரதியினுடைய எதார்த்தமும் கலந்த கலவைதான் என்னைக் கவிதை எழுத உத்வேகப்படுத்தியது. அடிப்படைத் தூண்டுதல் என்று சொல்லலாம். என்னிடம் ஒருவகைச் செவ்வியல் கூறு உள்ளதிற்கு இதுதான் காரணம்.



ரசனை: ஒரு தமிழ் இலக்கிய மாணவராகவும், ஒரு கவிஞராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இந்த மூன்று தளங்களை பற்றிய உங்களது அனுபவங்களைச் சொல்லுங்கள்.

சிற்பி: நான் மாணவனாய் இருந்த காலத்தைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பள்ளி மாணவனாய் இருந்த காலத்தில் இலக்கிய வெளிச்சம் சற்றும் கிடையாது. ஆனால் கேரளாவில் படித்துக் கொண்டிருந்ததால் மலையாள இலக்கியம் பற்றி வள்ளத்தோளை பற்றி இன்னும் பிற கவிஞர்களை பற்றி கேள்விப்படவும், சந்திக்கவும் இயன்றது. மலையாளக் கவிதைகளில் அப்போது மேலோங்கியிருந்த விஷயம் இசை. இசையில்லாமல் அவர்கள் எந்தக் கவிதையும் சொல்ல மாட்டார்கள். தொடக்கப்பள்ளியில் கூட இசை மயமாகத்தான் பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அந்த இசைத் தன்மை எனக்குள்ளும் ஓரளவு ஊடுருவியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கல்லூரிக்கு வந்த போது தமிழில் எனக்குப் போதிய பரிச்சயம் இன்மையால் வேகமாக ஓடி எல்லோருடனும் வரிசையில் சேரவேண்டும் என்ற உந்துதல் இருந்தது. எனக்குச் செலவுக்கு கிடைக்கும் பணத்திற்கு எல்லாம் புத்தகங்கள் வாங்கத் தொடங்கினேன். அப்போது சிறுகதையாசிரியராக அறியப்பட்டிருந்த புதுமைப் பித்தன் நாவலாசிரியர் காண்டேகர் போன்ற எல்லோருடைய புத்தகங்களும் என் பெட்டியில் இருக்கும். நவீன இலக்கியத்தையும் விட முடியாது. பழைய இலக்கியங்களையும் விட முடியாது. இந்த ஓட்டம்தான் என்னுடைய மாணவ வாழ்க்கையில் தீவிரமாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அர்ப்பணிப்புள்ள பொதுவுடமைவாதிகளோடு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் மார்க்சியம் என்ற கோட்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டது என்பதை விட சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வின்றி எல்லோருக்குமான வாழ்க்கையை கம்யூனிசம் தரும் என்ற புரிதலால் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மார்க்சியக் கோட்பாடுகள், மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள், அழகியல் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நான் தெரிந்து கொண்டவை பல. அச்சமயம் எல்லா இலக்கியமும் காலத்திற்கு கட்டுப்பட்டதுதான். அச்சமயம் காலமும் கருத்தும் என்ற அபூர்வமான ஒரு கட்டுரையை படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிலர் காலத்தை மீறியும் சிந்திப்பார்கள் ஆனால் அவர்களும் காலத்திற்கு கட்டுப்பட்டே இருப்பார்கள். ஆகவே அனைவரும் தத்தமது காலத்தின் வயப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்பது ஆரம்பத்தில் எனக்குப் பிடிபட்ட விஷயம். அதன் பிறகு சிதம்பர ரகுநாதன், ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களுடைய எழுத்துகளில் ஏற்பட்ட ஈடுபாடும், பின்னாட்களில் ஜெயகாந்தனை படிக்கும் வாய்ப்பும் என் மாணவப் பருவத்தில் கிடைத்தது. இவ்வாறாக என் மாணவப்பருவம் பயனடைந்தது.

பேராசிரியராக இருந்த அனுபவம் என்றால் நான் அதிகம் வேலை பார்த்தது பொள்ளாச்சிக் கல்லூரியில்தான். அங்கு முப்பத்திரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன் பிறகு பல்கலைக் கழகத்தில் ஏழாண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய பேராசிரியர்களான அப்துல்கபூர், மு.அண்ணாமலை, இப்போதும் வாழ்கிற கா.மீனாட்சி சுந்தரம் போன்றவர்களும், ஆங்கிலத்துறையில் இருந்த ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் அறிந்ததை எல்லாம் எவ்வித சுயநலமும் இன்றி மாணவர்களுக்கு உரியது எனக் கற்றுக் கொடுத்தார்கள். இதே பண்பாட்டைத் தான் நானும் ஆசிரியனாக இருந்த போது பின்பற்ற வேண்டும் என நினைத்தேன். என்னுடைய வகுப்புகளில் இலக்கியம் பாதியாகவும் வாழ்க்கை பாதியாகவும் இருக்கும். வாழ்கையோடு இலக்கியத்தை சொல்வது, வாழ்க்கை அனுபவங்களை வைத்து இலக்கியத்தைக் கற்றுக் கொடுப்பது என்பது என் பாணியாக இருந்தது. இப்பவும் என்னுடைய பழைய மாணவகள் என்னை சந்திக்கும் போதெல்லாம் வாழ்க்கையில் பல விஷயங்கள் உங்கள் வகுப்பிலிருந்து கற்றுக் கொண்டோம் என்று சொல்வார்கள். உதாரணமாக கல்வித் துறையில் இருக்கும் கார்மேகம் என் மாணவர். அவர் சொல்வார். நான் அலுவலகத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டதே உங்களிடமிருந்துதான் என்பார். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் அப்படி நேரடியாக எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. இலக்கியமும் வாழ்க்கையும் எப்படி இணைந்து போகிறது என்பதைத் தான் நான் கற்றுக் கொடுத்தேன். அந்த அனுபவம் பொள்ளாச்சிக் கல்லூரியில் பணிபுரிந்த போது அற்புதமான மாணவர்களைக் தேடிக் கொடுத்தது. அவர்கள் வாழ்வில் உயர்வதைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் கல்லூரிப் பேராசிரியர் பதவிக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களை நேசிப்பதும் மாணவர்கள் ஆசிரியர்களை நேசிப்பதும் என்ற உறவாடல்கள் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் சுயமுன்னேற்றம் என்று அவரவர்க்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதில்தான் கவனமாக இருப்பார்கள். பல்கலைக்கழகத்தை விட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய வாழ்வுதான் மிகச் சிறப்பானது. அது ஒரு இனிய அனுபவம்.

கவிஞராக இருந்த அனுபவம் என்றால் அதைப்பற்றி நான் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் சொல்வேன். நான் என்னை ஒரு கவிஞனாக உணர்ந்ததேயில்லை. நான் கவிதை எழுதுவதுண்டு. அதைப் பலரும் நன்றாக இருக்கிறது என்பார்கள் அல்லது விமர்சனம் செய்வார்கள். அதை ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது இலக்கியத்தில் ஒரு எல்லையைத் தொட்டு விட்டதாகவோ என்றைக்கும் நான் கருதியதில்லை. இன்றைக்கும் கருதவில்லை. உள்ளே தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வாசலாகத்தான் கவிதையை நான் கருதுகிறேன்.




ரசனை: பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள், ஒரு பல்கலைக் கழகத்தின் பணி என்பது வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு போதிப்பது அதில் தேர்வுகள் நடத்தி பட்டங்கள் வழங்குவது போன்ற பணிகள் மட்டும்தானா? குறிப்பாக நான் தமிழ்த்துறையை கருத்தில் கொண்டு கேட்கிறேன். இது சார்ந்த உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

சிற்பி: நான் பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அநேகமாக பாடம் கற்றுக் கொடுப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். அதை விடவும் அவர்களை ஆய்வுக்குத் தூண்டிவிடுவது. புதிய புதிய சிந்தனைகளை அவர்களை ஆய்வுக்கு பொருளாக எடுத்துக் கொள்ள வைப்பது இதில் நான் ஆர்வம் காட்டினேன். என்னுடைய மாண்வர்கள் எடுத்துக் கொண்ட பொருள்களைப் பார்த்தீர்கள் என்றால் வியப்பாக இருக்கும். உதாரணமாக ஒரு மாணவரின் தலைப்பு ‘இலக்கியங்களில் முடிவெடுத்தல் கோட்பாடு’. மேலாண்மைத் துறையில் உள்ள டிசிசன் மேக்கிங் என்பது ஒரு கோட்பாடு. நவீன மேலாண்மைக் கோட்பாட்டை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது. இராவணன் சில முடிவுகளை எடுப்பது, தர்மன் சில முடிவுகளை எடுப்பது போன்று காப்பியப் பாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் பற்றிய ஆய்வுகளை இவற்றோடு இன்றைய நிகழ்வுகளைப் பொருந்தும் படியான ஆய்வுகளைச் செய்து பார்க்கச் செய்தேன். அப்புறம் நிறைய கருத்தரங்குகளை நடத்தினேன். நான் இருந்த காலத்தில் ஒரு ஆண்டுக்கு நான்கு அய்ந்து கருத்தரங்குகளை நடந்திருக்கின்றன. பணிப் பட்டறைகள் நடத்தியிருக்கிறேன். பாடத்திட்டங்களை பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை மாற்றி அமைக்க முடியுமா என்பது பற்றி எல்லாம் கருத்தரங்குகள் நடந்திருக்கின்றன. அது மாதிரி பெண்ணியக் கருத்தரங்குகள் அந்தக் காலத்திலேயே நடத்தினோம். நாட்டின் புகழ் பெற்ற பெண்ணியச் சிந்தனையாளர்கள் அவர்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாலும் தங்களது சிந்தனையை பகிர்ந்து கொள்ள களம் அமைத்துக் கொடுத்தோம்.

குழந்தைகள் இலக்கியம் பல்கலைக்கழகங்களில் பேசப்படாத ஒரு துறை. இது பற்றிய மூன்று நாள் கருத்தரங்குகளை நடத்தினோம். இதில் குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள். எல்லாவற்றையும் விட தலித் இலக்கியம் பற்றி ஒரு கருத்தரங்கத்தை நடத்தினோம். நான் தலித் இலக்கியம் பற்றி கருத்தரங்கம் நடத்திய போது அந்தக் கோட்பாடு என்பது தமிழ் நாட்டில் வளர்ச்சியடையவில்லை. அங்கும் இங்குமாக பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம். அப்போது நான் ராஜ் கெளதன், ரவிக்குமார், அ.மார்க்ஸ் போன்றவர்களை வரவழைத்து பேசச் சொன்னேன். அப்போது தலித் இலக்கியம் குறித்து பேசவே அவர்கள் தயக்கப்பட்டார்கள். இந்தச் சிந்தனை குறித்து தெளிவான வரையறை ஏதும் இல்லை. அதனால் என்ன பேசுவது என்று யோசித்தார்கள். ஆனால் மாணவர்களாக இருப்பவர்கள் நாளைய ஆசிரியர்கள் என்பதால் அவர்க்ளுக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் என்று இந்த மாதிரியான கருத்தரங்குகளை நடத்தினேன். தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தலித் அமர்வு ஒன்றை வைத்திருந்தார்கள். அதற்கு தலமையாக சிவகாமி I.A.S., அவர்களைப் போட்டிருந்தார்கள். அவர்களை எனக்கு முன்பே தெரியும். அவர்களுடைய ‘பழையன கழிதலும்’ என்ற நாவலைப் பாடமாக வைத்திருந்தேன். இதை எப்படி பாடமாக நடத்துவது என்று பெரும் கூச்சல்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. அதே மாதிரி தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற முதல் நாவலை பாடமாக வைத்த போது இந்த நாவலில் உள்ள இஸ்லாமியச் சொற்கள் புரியவில்லை என்றெல்லாம் ஆசிரியர்கள் சொன்னார்கள். அதே மாதிரி பெருமாள் முருகனின் ஏறு வெயில் என்ற நாவலை பாடமாக வைத்தேன். அப்போது அவர் மாணவராக இருந்தார். இது மாதிரியான நவீன இலக்கியப் படைப்புகளை பாடத்திட்டங்களுக்குள் கொண்டு வருவது போன்ற காரியங்களை நான் துறைத் தலைவராக இருந்த போது செய்திருக்கிறேன். ஒரு முறை பெருமாள் முருகன் ‘எனது நாவலை பாடமாக வைத்து எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள்’ என்று காலச்சுவடில் எழுதின போது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் பல்கலைக் கழக மட்டத்தில் பல ஆசிரியர்களின் எதிப்பை மீறி சில விஷயங்களை செய்திருக்கிறேன். என்ற நிறைவு எனக்குண்டு. மாணவர்களைப் புதிய நோக்கில் புதிய சிந்தனைகளை நோக்கி பயணிக்க வைக்க வேண்டும் என்று நான் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தில் செய்திருக்கிறேன். மூலிகைக் கருத்தரங்கு கூட நடத்தினோம். அதில் மிக அபூர்வமான செய்திகள் எல்லம் அடங்கிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அந்த கட்டுரைகளில் இன்னும் சில வெளியிடப்படவில்லை. பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் கிளை கோவையில் வேளாண்பல்கலைக் கழகத்தில் இருக்கு அவர்களை அழைத்து வந்து பேச வைத்தோம். அவர்கள் மலை வாழ் மக்கள் பற்றிய ஆய்வுகளை எல்லாம் அறிக்கைகளாக அரசுக்கு கொடுத்திருக்கிறோம் ஆனால் அவைகள் பயனில்லாமல் போய்விட்டன என்றார்கள். மலை வாழ் மக்களைப் பொருத்த வரையில் அவர்கள் சிறிய அளவில் தானியங்களை பயிரிடுகிறார்கள். ஆனால் பொட்டனிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் நிபுணர் சொல்கிறார் மலை வாழ் மக்களிடத்தில் அபூர்வமான முதல் தரமான விதைகள் இருக்கின்றன வெளியில் இருப்பவைகள் எல்லாம் பல சேர்மானங்களால் அதன் இயல்புத்தன்மை மாறிவிட்டது. மலை வாழ் மக்களிடம் மூலவித்துகள் மாறாத விதைகள் இன்னமும் உள்ளன என்கிறார். அவைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம் ஆனால் பயனில்லை என்று சொன்னார்கள். இது போலப் பல கருத்துகளை மாணவர்களிடம் பரிமாறிக் கொள்ள தமிழ்த் துறைத் தலைவர் என்ற பொறுப்பு எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

ரசனை: மரபிலிருந்து புதுக்கவிதை உடைந்து எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் மணிக்கொடிக் காலம், எழுத்துக் காலம், வானம்பாடிக் காலம் என்று பல்வேறு காலகட்ட வளர்ச்சிகள் தமிழ் கவிதைக்கு உண்டு. இந்த பரிமாண வளர்ச்சி கவிதையை எப்படி முன்னெடுத்துச் சென்றுள்ளது?

சிற்பி: நான் ஐம்பதுகளில் மரபுக் கவிதை எழுதத் தொடங்கியவன். நான் எழுதிய காலத்தில் மரபு ஒரு வலிமை வாய்ந்த சக்தியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அப்போது பாரதிதாசன் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய நிழலில் பலர் மரபுக் கவிதை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதை மீறி புதுக் கவிதை வளர்வது கடினமான காரியமாக இருந்தது. மணிக் கொடிக் காலத்தில் புதுக் கவிதை துளிர்விட்டது என்று சொல்லலாம். அப்போது கூட கு.ப.ரா., புதுமைப் பித்தன், போன்றவர்கள் மரபின் ஓசை நயத்தோடுதான் எழுதினார்கள். பிச்சமூர்த்தியும் கூட அப்படித்தான் முதலில் எழுதினார். அதை அடுத்து எழுத்துக் காலக்கட்டம் ஆரம்பித்த போதுதான் அதற்கான தனித் தன்மை உருவாக ஆரம்பித்தது. அதற்கு முன் இருந்ததெல்லாம் வசன பாணிக் கவிதைதான். இந்த காலக்கட்டத்தில் புதுமை பித்தன் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு இருந்தது. அவர் மரபை மரபின் மூலமாகவே கேலி செய்பவராகயிருந்தார். அவர் வெண்பா எழுதுவார் ஆனால் அதில் வெண்பாவுக்கான இலக்கணம் இருக்காது. வெண்பாவை உடைக்கிற பணியை வெண்பாவின் வடிவத்திலேயே செய்தார். ஆனால் அவருக்கு ஓசைகளின் மீது நம்பிக்கையிருந்தது. அந்த நேரத்தில் புது எழுத்தாளர்களில் பாரதிதாசனை நேசித்தவர் புதுமை பித்தன் மட்டும் தான். அதற்கு காரணம் அவருக்கு மரபில் இருந்த ஈடுபாடு. அவர் கட்டுரைகளில் ஓசை நயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். “சாம்ராட்டுகளின் சப்த ஜாலம்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஓசைகள் எப்படி கவிதைக்கு ஒரு தனியான பணியை செய்கிறது என்று அதில் குறிப்பிட்டிருப்பார். அதைத் தாண்டி தனித்தன்மையோடு கவிதைகள் எழுதியவர் எழுத்து காலத்தில் பிச்சமூர்த்திதான். எழுத்துக் காலக்கட்டத்தின் ஆரம்பத்திலேயே எனக்கு அவர்களோடு தொடர்புண்டு. சி.சு.செல்லப்பா எங்க கல்லூரிக்கு புத்தகங்களை தூக்கிட்டு வருவார். அவர் வந்தால் எங்கள் வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டுத்தான் செல்வார். நவீன இலக்கியப் புத்தகங்களை இப்படி மூட்டை மூட்டையாக கட்டி சுமந்துக் கொண்டு அலைகிறாரே என அவர் மீது மிகுந்த அனுதாபம் உண்டு. அப்போது புதுக்குரல்கள் என்ற தொகுதியை வெளியிட்டு எழுத்து இதழில் புதுக்கவிதைக்கு ஊக்கம் தந்து வளர்ச்சியடையச் செய்த நிலையில் இது ஏதோ வித்தியாசமாக இருக்கிறது. வருங்கால கவிதைகளின் அடையாளம் இங்குதான் இருக்கிறது என்கிற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆகவே நானும் அது போல எழுத ஆரம்பித்தேன். என் கவிதையைப் பார்த்துட்டு சி.சு.செல்லப்பா இதை நான் புதுக் கவிதை என்று ஒத்துக்க மாட்டேன் என்றார். நானும் அவரோடு விவாதம் செய்வேன். ஆனால் அவர் வைத்த வாதங்களோடு நான் முரண்பட்டதும் உண்டு.


ரசனை: சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் உங்கள் கவிதைகள் ஏதும் பிரசுரமாகியிருக்கிறதா?

சிற்பி: எழுத்து இதழில் நான் எழுதியது இல்லை. ஆனால் அதே காலக்கட்டத்தில் வெளிவந்த க.நா.சு வின் இலக்கிய வட்டத்தில் என்னுடைய கவிதை வெளிவந்திருக்கிறது. அந்தக் கவிதையின் தலைப்பு “காமக்கறங்கு” என்று நினைக்கிறேன். அவர் நம் கவிதையை அங்கீகரித்துவிட்டார் என்ற மகிழ்ச்சி எனக்குள் ஏற்பட்டது. ஆனால் க.நா.சு மேல் எனக்கு ஒரு இனந்தெரியாத பற்றும் வெறுப்பும் இருந்தது. பிற்காலத்தில் அவரை அழைத்து வந்து சொற்பொழிவு ஆற்ற வைத்த போது சொன்னார். நான் கவிஞர்கள் என்று பட்டியல் போடுவதையெல்லாம் நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ள கூடாது. நான் யாரை படித்தேனோ அவர்களை மட்டுமே பட்டியலிட்டுச் சொல்கிறேன். எனக்கு எல்லாக் கவிதைகளையும் பார்க்க வாய்ப்பில்லை என்று மிக வெளிப்படையாக பேசினார்.

எழுத்துக் காலக் கவிஞர்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகளை எழுதியவர்கள் நகுலன், தருமு.சிவராம் (பிரமிள்), சுந்தரராமசாமி ஆகியோர். அதன் பிறகு கசடதபற இதழ் வெளிவந்தது. அதே காலத்தில் வானம்பாடியும் வெளிவந்து விட்டது. இவை இரண்டுக்குமிடையே மோதலும் முரண்களும் இருந்தன. ஆனால் நான் எல்லாத் தரப்பினரின் கவிதைகளையும் வரவேற்கிறவன். யாரிடத்தில் சிறந்த கவிதைப் பண்பு இருந்தாலும் அதை நான் மனதார வரவேற்பேன். இங்கு தகராறு நடந்து கொண்டிருந்த போது நான் சென்னையில் கசடதபற குழுவைச் சந்தித்தேன். ஞானக்கூத்தன், ந.முத்துச்சாமி, மகாகணபதி போன்றவர்களைச் சந்தித்துப் பேசினேன். அப்போ ஞானக்கூத்தன் உங்க கவிதை ஒன்று சொல்லுங்க என்று கேட்டார். நான் என்னுடைய கவிதை ஒன்றை சொன்னேன். அதைக் கேட்டு விட்டு உங்க கவிதைல ஒரு அனிமேஷனே இல்லையே என்றார். அப்புறம் நான் உங்க கவிதை ஒன்றைச் சொல்லுங்க என்றேன். அவர் சொன்னார். நான் உங்க கவிதையிலும் அனிமேஷன் இல்லையே என்றேன். பொதுவாக ஞானக்கூத்தனுக்கு கவிதையை நன்றாகவே வாசிக்க வராது. அதாவது பிரசண்டேசன் அவ்வளவா வராது. கவிதை படிப்பதென்பது ஒரு கலை அது எல்லோருக்கும் வாய்க்காது. ஞானக்கூத்தன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவரும் அப்போ வெளிவந்திருந்த எனது கவிதைத் தொகுப்பை பற்றியும் வானம்பாடிகளில் ஒருவராகிய தேனரசனின் கவிதைத் தொகுப்பை பற்றியும் கசடதபறவில் பாராட்டி எழுதியிருக்கிறார். அது ஒருவகையான நட்பு. இதில் சண்டை போட்டுக் கொள்வதெல்லாம் அக்னிபுத்திரனும் தர்மு சிவராமும்தான். நாங்க வேடிக்கை பார்ப்பதோடு சரி. இப்படியாக வானம்பாடி காலத்தில் இந்த கவிதை வடிவத்தை நாம் நம் நம்பிக்கைகளுக்கு ஏற்றபடி அதை உருவாக்கம் பண்ண வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. வானம்பாடி தொடங்குவதற்கு முன்னால் இதழ் தொடங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருந்தது. அதாவது, முல்லை ஆதவன் ஒரு அமைப்பை வைத்திருந்தார். சிங்கநல்லூருக்கு பக்கத்தில் அப்ப ஒரு அமைப்பை உருவாக்கணும் ஒரு இதழ் நடத்தணும் என்றெல்லாம் முடிவு செய்திருந்தார்கள். அப்போது கு.வே.கி ஆசான் அவர்களின் கட்டிடத்தில்தான் நாங்க அடிக்கடி கூட்டம் நடத்துவோம். அவர் இடம் கொடுத்து உதவுவதோடு எங்களோடு கவிதை விவாதத்திலும் கலந்து கொள்வார். திடீரென்று எல்லாம் வானம்பாடி இயக்கத்தை தொடங்கவில்லை. தொடர்ந்து பல காலம் அங்கு கூடி விவாதிப்போம் கவிதை என்றால் என்ன? கவிதையை எப்படிப் புதிய நோக்கில் எழுத வேண்டும்? என்றெல்லாம் யோசித்தோம் விவாதித்தோம். அதன் பிறகு அமைப்பு ஆரம்பிக்கலாம் என்று முடிவு பண்ணிய போது என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்வி வந்தது. கவிஞர்.இளமுருகு வானம்பாடி எனப் பெயர் வைக்கலாம் என்றார் நான் அது ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கு அதனால் மானுடம் பாடும் என்ற அடைமொழியை சேர்த்து வைக்கலாம் என்றேன். இதழில் வானம்பாடி என மேலே போட்டிருக்கும் கீழே மானுடம் பாடும் விலையில்லாக் கவிமடல் என்று போட்டிருக்கும். அன்று கவிதை எழுதுவதில் ஒரு சோதனைத் தீவிரம் இருந்தது. வித்தியாசமான முறையில் கவிதை எழுத வேண்டும் என்ற வேகம் எங்களிடம் இருந்தது. வானம்பாடி இதழை 300 அல்லது 400 படிகள்தான் அச்சடித்தோம். ஆனால் அவை இலங்கை, மலேசியா, பம்பாய் என பல்வேறு பகுதிகளுக்கும் பரவியிருந்தது. இது எப்படி தெரிஞ்சது என்றால் பிற்காலத்தில் நான் பம்பாய் தமிழ்சங்கத்திற்குப் பேச போயிருந்த போது செம்பூர் தமிழ்ச் சங்கத்திற்கும் கூட்டிக் கொண்டு போனார்கள். அதன் செயலாளர் சொன்னார் அந்தக் காலத்தில் நான் வானம்பாடி இதழின் வாசகர் என்றார். அதைப்பற்றி ரொம்ப நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். மலேசியா போயிருந்த போதும் வானாம்பாடி இதழைப் படித்து விட்டு நாங்களும் வானம்பாடி என்ற பெயரில் ஒரு இதழ் நடத்தினோம் என்று சொன்னார்கள். ஈழத்திலிருந்து வானம்பாடி இதழில் மேமண்கவி போன்றோர் எழுதினார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஈழத்தில் அவர்களால் சுதந்திரமாக எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அந்த மாதிரி சூழ்நிலையில் கவிதைகளையும் நூல்களையும் எடுத்துக்கொண்டு பத்மநாப அய்யர் என்பவர் என்னை வந்து சந்தித்தார். இதை நூல்களாகப் பிரசுரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்திருந்தார். அப்போது நாங்களே மிகவும் சிரமத்திலிருந்தோம். அப்போது கல்லூரி ஆசிரியர்களுக்கு பெரிதாக சம்பளம் இல்லை. ஆளுக்கு 10,20 எனப் போட்டுத்தான் இதழை நடத்திக் கொண்டிருந்தோம். கவிதைகளை வேண்டுமென்றால் கொடுங்கள் நாங்கள் இதழில் பிரசுரிக்கிறோம். புத்தகமாகப் போடுவதென்றால் சென்னையில் உள்ள பதிப்பகங்களை போய் பாருங்கள் என்று அனுப்பி வைத்தோம்.


ரசனை: வானம்பாடியின் 21வது இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதில் யாரெல்லாம் எழுதினார்கள். இப்போதுள்ள தீவிரத்தன்மை அந்த படைப்புகளில் வெளிப்பட்டதா?

சிற்பி: அந்த இதழில் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொ, அ.யேசுராசா, ஊர்வசி போன்ற கவிஞர்களின் கவிதைகள் அந்த இதழில் வெளிவந்தன. ஆனால் அந்தக் கவிதைகளில் தீவிரம் என்பதை விட வலியும் வேதனையும் இருந்தது. ஈழப்படைப்பாளிகளின் எழுத்தைப் புத்தகமாக கொண்டு வருவதில் பத்மநாப அய்யர் மிக தீவிரம் காட்டினார். அதன் பிறகு யுத்தம் தீவிரமானது. அங்கிருந்த படைப்பாளர்களில் பலரும் பல பகுதிகளுக்கும் சிதறிப் போனார்கள். பத்மநாப அய்யாரோடு அதன் பிறகு எனக்கு தொடர்பு ஏதும் இல்லை. அவர் உயிருடன் இல்லை என்றுதான் நான் நினைத்தேன். 1997ல் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் சொற்பொழிவாற்ற அமெரிக்காவுக்கு போயிருந்தேன். என் மனைவியின் தங்கை மகள் அப்போது லண்டனில் இருந்தார். வரும் வழியில் அவரைப் பார்த்துவிட்டு அங்கேயே தங்கி விட்டு வரலாம் என்று போயிருந்தேன். நான் அங்கு வருவதற்கு முன்பே பத்மநாப அய்யர் அதைத் தெரிந்து கொண்டு தொலை பேசியில் தொடர்பு கொண்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். அப்போதுதான் அவர் உயிருடன் இருப்பதே தெரியும். நான் அங்கு அவரைச் சந்தித்த பிறகு வேறு பலரையும் சந்தித்தேன். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் நிலையை ஆழமாய் உணர முடிந்தது. அவர்களின் ஊக்கமும் உழைப்பும் எப்படி பட்டது என்பதை அங்கு நான் பார்க்க முடிந்தது. அதற்கு அவரே ஒரு உதாரணம். அவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வருபவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருந்தார். அப்போது நான் அங்கிருந்து ஒரு வாரத்தில் பாரிஸைச் சுற்றிப் பார்க்கலாம் என்று டூரிஸ்ட் விசா எடுத்திருந்தேன். அங்கு தனியாக போய்ப் பார்க்க எனக்கு யாரையும் தெரியாது. பத்மநாப அய்யரிடம் சொன்னேன் அவர் ஈழத்து நண்பர் ஒருவரை அங்கு சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த நண்பர் சொன்னார். உங்கள் பயணம் முழுதும் நான் கூடவே இருக்க முடியாது. நான் ஒரு வேலையில் இருக்கிறேன். அதனால் மெட்ரோ ரயில் மூலமாகவே பாரிஸ் முழுதையும் யார் துணையுமின்றிச் சுற்றிப்பார்க்கலாம். அதற்கான முறைகளை நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றுப் பல வழிமுறைகளையும் சொன்னார். அவரும் சில இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிப் போய்க் காட்டினார். இறுதியாக அவர் என்னை விட்டுப் பிரியும் போது சொன்னார். ஐயா, நான் உங்களுக்கு ஒரு தேநீர் மட்டும்தான் வாங்கித் தர இயலும் என் பொருளாதாரம் அவ்வளவுதான் என்றார். இதைக் கேட்டவுடன் என் மனது பாரமாகி விட்டது. அப்போது அவரிடம் ‘என்ன வேலை செய்கிறீர்கள்’ என்று கேட்டேன் . ஐயா, நான் அதைச் சொல்ல மாட்டேன். இன்ன வேலை என்றில்லை. எல்லா வேலைகளையும் செய்கிறோம் என்றார்.


ரசனை: வானம்பாடி கவிதை இயக்கத்தில் இருந்த கவிஞர்களில் முக்கியமான கவிஞர் நீங்கள். வானம்பாடி இயக்கம் எப்படித் தோன்றியது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் ஏன் அது தொடர்ந்து இயங்கவில்லை?

சிற்பி: வானம்பாடியை ஒரு இயக்கமாக நடத்தவேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கமாக இருந்தது. இடது சாரி சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுத்து எழுதுவது கொள்கையாக இருந்தது. ஆனால் அதில் இருந்த எல்லோரும் பொதுவுடமை இயக்க சிந்தனையாளர்கள் அல்ல. உதாரணமாக மு.மேத்தா காங்கிரஸ் அனுதாபி, அது போல தமிழ் உணர்வுச் சிந்தனையாளர்களும் இதில் இருந்தார்கள். இதில் மையமாக இருந்து இயங்கியவர்களில் கோவை ஞானி, புவியரசு, ஜன.சுந்தரம் போன்றவர்கள்தான் மார்க்சிய சிந்தனையாளார்கள். மற்றவர்கள் எல்லாம் அதன் அனுதாபிகளாகவும் புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.வானம்பாடி இதழில் கவிதைகளை வெளியிடும் போது விவாதித்துதான் ஒவ்வொரு இதழிலும் கவிதைகள் வெளிவந்தன. ஒரு குறிப்பிட்ட காலம்-10 இதழ்களுக்கு மேல் வெளிவந்த பிறகு கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் வந்ததன. அந்தச் சூழ்நிலையில், ஞானி என்ன சொன்னார் என்றால் முழுக்க முழுக்க மார்க்சிய சிந்தனை சார்ந்த படைப்புகளைத்தான் பிரசுரிக்க வேண்டும் அது அல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்றார். அப்போது என்னைப் போன்ற ஆட்கள் என்ன சொன்னோம் என்றால். இது ஒரு இலக்கிய இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல. அரசியல் அனுதாபமுடைய ஒரு இலக்கிய இயக்கம். இலக்கிய இயக்கம் என்பது இலக்கியம் சார்ந்துதான் இயங்க வேண்டும். தத்துவமா? இலக்கியமா? என்று வந்தால் இலக்கியத்தில் அடிப்படையில் கவித்துவம் வேண்டும். கவித்துவத்தோடு தத்துவமும் இருந்தால்தான் ரசிக்க முடியும். வெறும் தத்துவம் கவிதை ஆகாது என்றேன். என்னைச் சார்ந்த கருத்தோடு பலர் இருந்தார்கள். அதில் புவியரசுக்கு ஒரு தவிப்பு இருந்தது. பிறகு எங்களோடு இணைந்து கொண்டார். இது அடிப்படையாக நிலவிய கருத்துவேறுபாடு என்று சொல்லலாம். ஒவ்வொருத்தரும் ஏன் அப்படி நினைத்தார்கள் என்று எனக்கு தெரியாது. இது ஒரு கடும் பிரச்னையாக இருந்தது. இதைப் பேசித் தீர்க்கவேண்டும் என்று ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். அதில் ஞானி, அக்கினி புத்திரன், இளமுருகு இவர்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும். நான் புவியரசு மேத்தா எல்லாம் ஒரு பக்கமாகவும் இருந்து பேசினோம். சமாதான நோக்கோடு நான் நடுநிலையோடு பேசினேன். அப்போது பேசிக் கலைந்ததோடு சரி ஒன்றும் சரியாகவில்லை. கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது வேறு ஒரு இதழும் வந்து கொண்டிருந்தது. புதிய தலைமுறை என்று நினைக்கிறேன். இதை ஞானி, ராசியண்ணன் போன்றவர்கள் நடத்தினார்கள். அதில் நீங்கள் என்ன வேண்டுமானலும் எழுதிக் கொள்ளுங்கள் அதைப் பற்றி கவலையில்லை. வானம்பாடியில் அது மாதிரி வேண்டாம் என்ற முடிவிலேயே இயங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் பிரச்சனை ஓயவில்லை. முற்றிக் கொண்டே வந்தது. இறுதியில் வானம்பாடியை நடத்துவதா வேண்டாமா என்ற நிலை வந்த போது நான் 10ம் இதழில் ஒரு தலையங்கம் (முத்திரைகளும் முகத்திரைகளும்) எழுதினேன். வானம்பாடியை இப்படித்தான் நடத்த வேண்டும் என்கிற மையக் கருத்தோடு அதை எழுதியிருந்தேன். அதன் பிறகு நிரந்தரமான பிரிவு அதனால் இதழை நான் பொள்ளாச்சிக்கு கொண்டு போய் நடத்தினேன். பிறகு அவர்கள் வெளிச்சம் என்ற இதழை துவங்கினார்கள். அது இரண்டு இதழ்கள்தான் வந்தது. அதற்கிடையில் வெளிச்சம் என்ற பெயரில் வானம்பாடிகளுடைய கவிதைத் தொகுப்பு ஒன்று வந்தது. அதைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை கவிஞர்.தமிழ்நாடன் செய்தார். அந்தத் தொகுப்பில் தொகுப்பாசிரியரான ஞானி தனக்கு தெரியாமல் சில கவிதைகள் சேர்க்கப்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டினார். இதிலிருந்து மன ஒற்றுமை இல்லை என தெரிந்து விட்டது. இதழ் என் கைக்கு வந்த பிறகு சில மாற்றங்கள் செய்து நடத்தினேன். பிற மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு கவிதைகள். தர்மு சிவராமு, ல.சா.ரா. போன்றவர்களிடம் நேர்முகம் கண்டு வெளியிட்டோம். பிறகு அவரவர் சொந்த முயற்சியில் ஈடுபட்ட போது ‘வானம்பாடி’ நின்று விட்டது.


ரசனை: வானம்பாடி இயக்கம் நின்று போனதிற்கு எமர்ஜென்சி காலம் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்போது என்ன மாதிரியான நெருக்கடிகள் இருந்தன?

சிற்பி: ஆமாம். நெருக்கடி நிலைக் காலம் ஒரு காரணம். நெருக்கடி நிலையை ஆதரித்தவர்களும் எதிர்த்தவர்களும் என இரு சாரர்களும் இதில் இருந்தார்கள். பொதுவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் இதை ஆதரித்தார்கள். மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் இதை எதிர்த்தார்கள். எதிர்த்தோரில் கோவை ஞானி, அக்கினி புத்திரன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அதை ஆதரித்தவர்களில் நான் புவியரசு போன்றவர்கள் ஒரு அணியாக இருந்தோம். இந்தப் பிளவு ஏற்படுவதற்கு புவியரசு தொகுத்த ‘இந்திரா இந்தியா’ ஒரு காரணம். இந்திராவைப் பற்றிய பத்திரிக்கை செய்திகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக கொண்டு வரும் முயற்சி நடந்தது. அதற்கு தொகுப்பாசிரியராக இருந்தவர் தமிழ் நாடன். இது தேவையில்லாத வேலை என சிலர் சொன்னோம். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. இதைப் பற்றியெல்லாம் மாற்று அணியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆரம்பத்தில் எமர்ஜென்சியை ஆதரித்தோம். ஆனால் அது போகப் போக வேறு மாதிரியாகப் போனது. கடைசியில் அதற்கு துணை போனவர்களாக ஆகி விட்டோம். அரசின் வானொலி, செய்தித் துறை போன்றவை எங்களை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். இந்திராவின் 20அம்ச திட்டத்தை ஆதரித்து கவியரங்கம் நடத்தினோம். கிராமங்களுக்குச் சென்று மேடைப் பிரச்சாரம் எல்லாம் செய்தோம். இதைப் பிரமாதமாக வானொலியில் ஒளிபரப்பினார்கள். திருச்சியில் பெரிய அளவில் 20 அம்ச திட்டத்தை ஆதரித்துக் கவியரங்கம் எல்லாம் கூட நடந்தது. நெருக்கடி நிலை காலத்தில் எங்கள் பணி தவறாகத்தான் போய் விட்டது.

ரசனை: வானம்பாடி இயக்கம் நகசல் பாரி இயக்கதிற்கு ஆதராவானது எனக்கருதி காவல் துறையின் அடக்கு முறைக்கு ஆளானது என்று சொல்லப்படுகிறது. இந்த அடக்கு முறைக்கு பயந்து பல கவிஞர்கள் ஒதுங்கிக் கொண்டதாகவும் புவியரசு, ராசியண்ணன் போன்றவர்கள் போலிஸ் கஸ்டடியில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என சொல்லப்படுகிறதே?

சிற்பி: அப்படி இல்லை. நகசல் பாரி இயக்கம் வடக்கில் வளர்ந்தது அது கோவையிலும் மையம் கொண்டிருந்தது. இந்த இயக்கத்தோடு ஞானி, ராசியண்ணன் போன்றவர்களுக்குத் தொடர்பு இருந்ததாக பேசப்பட்டது. வலது சாரியாக பிரிந்திருந்த எங்களுக்குத் தொடர்பு கிடையாது. ஆனால் போலிஸ்காரர்களுக்கு வலது இடது என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஆகவே அவர்களுடைய விசாரணை எல்லைக்குள் நாங்களும் இருந்தோம். அப்போது இந்த வீட்டில் கீழே உள்ள முன்அறையில்தான் நான் படுத்திருப்பேன். அப்போது நக்சல் இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் நடு இரவில் வந்து கதவை தட்டுவார்கள். அப்போது அவர்கள் சொல்வார்கள். தமிழ்நாட்டில் போலிஸாரால் நாங்கள் வேட்டையாடப்படுகிறோம். அதனால் கேரளப் பகுதிக்குத் தப்பி செல்ல இருக்கிறோம் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் மீது எங்களுக்கு அனுதாபம் இருந்தது. ஆனால் அவர்கள் இயக்க நெறிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனினும் அவர்களை மனமார ஆதரித்தவர்களும் எங்களில் இருந்தார்கள். எங்களில் பலர் பெரும்பான்மையினரின் நன்மைக்காக சில தீவிரமான செயல்பாடுகளை ஆதரிப்பதில் தவறில்லை என்ற அளவிற்கு சிந்தித்திருந்தோம். மற்றபடி அவர்களின் தீவிரவாத நெறியை ஆதரித்ததுக் கிடையாது.

ரசனை: இந்த கருத்துக்களோடு புவியரசு, அக்கினி புத்திரன் போன்றவர்களுக்கு உடன்பாடு இருந்ததா?

சிற்பி: இல்லை. ஞானியும், ராசியண்ணனும் தான் தீவிரமாக இருந்தார்கள். அதனால் போலிஸ் விசாரனைக்குட்படுத்தபட்டார்கள். அப்போது நடந்ததாக சொல்லப்படும் செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியாது. ஞானி தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொல்லி விட்டதாக சொன்னார்கள். ராசியண்ணன் தான் கடுமையாக பாதிக்கப்பட்டவர். போலிஸ் அவரை அடித்து நொருக்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் கடும் துன்பங்களை ராசியண்ணன் தான் அனுபவித்தார். கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் சிறைகளில் எல்லாம் கொண்டு போய் வைத்து கொடுமைப்படுத்தினார்கள். ஞானி, ராசியண்ணன் போன்றவர்கள் நக்சல்களின் பொதுவுடமைக் கருத்துகளோடு உடன்பாடு கொண்டிருந்தார்களே தவிர அவர்களின் சட்டத்திற்குப் புறம்பான தீவிர செயல்களுக்கு ஆதரவு தெரிப்பவர்கள் அல்ல. சமுதாய மாற்றத்திற்கு துணைபுரியக்கூடிய கருத்துகளைத் தான் நாங்கள் ஆதரித்தோம். நக்சல் இயக்க திகம்பரக்கவிகளை நாங்கள் நேசித்தோம். அவர்களைப் போல வர வேண்டும் என நாங்கள் ஆசைப் பட்டோம். இப்படி இலக்கிய ரீதியாகதான் எங்கள் செயல் பாடுகள் இருந்தன. அரசியல் ரீதியாக இருந்தது என்று சொல்ல முடியாது. புவியரசு தீவிரமாக பேசுவார் என்பதாலேயே அவரும் விசாரணை எல்லைக்குள் வந்ததுண்டு ஆனால் ராசியண்ணன் தீவிரமாக அதில் பாதிக்கபட்டிருந்ததால் எங்களோடு இரண்டாண்டுகளாக அவருக்குத் தொடர்பில்லை. பல விசாரணைகளுக்குப் பிறகு ராசியண்ணனுக்கு நக்சல்களோடு எந்தத் தொடர்பும் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். கவிதைப் பற்றிய கருத்து, நெருக்கடி நிலை, தனிமனித உணர்வு இப்படிப் பல காரணங்களால் வானம்பாடி இயக்கம் உடைந்தது. தனி மனித விருப்பு வெறுப்புகளும் இருந்தது. எப்படி என்றால் கங்கைகொண்டான் என்ற இளைஞர் வேளாண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரும் வானம்பாடியில் எழுதினார். மு.மேத்தாவும் எழுதினார். இதில் மு.மேத்தா ரொம்ப பாப்புலர் ஆனவர். அவருக்கு தனியான ரசிகர் கூட்டமே இருந்தது. கங்கை கொண்டான் வானம்பாடிகளில் கொஞ்சம் நவீனத்தோடு கவிதை எழுதக் கூடியவர். இப்படி இளைஞர்கள் எல்லாம் பேர் வாங்க கூடிய அளவிற்கு எழுதுகிறார்கள் என்ற கருத்து வயதில் மூத்தவர்களுக்கு இருந்திருக்க கூடும்.
ஞானி ஒரு படைப்பளர் அல்ல. அவர் ஒரு திறனாய்வாளர். அவர் வானம்பாடியில் கல்லிகை என்ற தலைப்பில் ஒரே ஒரு கவிதைதான் எழுதினார். அதுமாதிரியே ஜன.சுந்தரம். இம்மாதிரியான இயக்கங்களில் படைப்பாளர்கள்தான் முதன்மையாக கருதப்படுவார்கள். திறனாய்வாளர்கள் இரண்டாம்பட்சமாகத்தான் கருதப்படுவார்கள். இது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு காரணமாக இருந்திருக்க கூடும். இதனாலும் அந்த இயக்கத்தில் பிளவு வந்திருக்கலாம். அந்தக் காலத்தில் மு.மேத்தாவின் கவிதைகள் தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதை தீபம் இதழில் வெளிவந்தது. காந்தியைக் கடுமையாக மறுக்கிறவர்கள் அந்த அமைப்பில் இருந்தார்கள். காந்தியை தேசப்பிதா என்று போற்றி கவிதை எழுதினால் அவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?. இந்த மாதிரி விஷயங்களை ஞானி தீவிரமாக விமர்சிக்க கூடியவர். எந்த கொள்கையை ஆதரிக்கறாரோ அதை அழுத்தமாகச் சொல்லக் கூடியவர். ஒரு எடுத்துக்காட்டாக அந்தக் காலத்தில் சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள உலகம் முழுதும் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். தமிழ்நாடு முழுதும் சுற்றிப்பார்க்க அவர்கள் அழைத்துச்செல்லபடும் போது கோவைக்கும் வந்திருந்தார்கள். அப்போது நானும் புவியரசுவும் இன்னும் சில கவிஞர்களும் அவர்கள் முன்னிலையில் கவிதை வாசிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இதை ஏற்பாடு செய்திருந்தது பி.எஸ்.ஜி கல்லூரி ஜி.ஆர்.தாமோதிரன். நாங்கள் கவிதை வாசித்து விட்டு திரும்பி வந்தோம். எப்போதும் நாங்கள் சங்கமிக்க கூடிய இடம் ரயில்நிலையம் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய டீக்கடை. அந்தக் கடையில் டீ சாப்பிட அமர்ந்திருந்த போது ஞானி வந்தார். எல்லாரும் எங்க போயிட்டு வர்றீங்க என்றார்? சொன்னோம். உடனே ஞானி கோபத்தோடு. எவனோ ஒரு பூர்ஷ்வா நடத்தறான் அங்க போய் நீங்க கவிதை வாசித்து விட்டு வந்தீங்களோ என்றார். இப்படித்தான் அவர் பேசுவார் என்றாலும் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நாங்கள் பழகுவோம். சாதரண விஷயங்களைக் கூட கடுமையாக விமர்சிப்பார். அவரைப் பொறுத்தவரை மார்க்சிய-கம்யூனிச சிந்தனைகள் இல்லாத எழுத்துகளை அவர் ஆதரிக்க மாட்டார். ஆனால் வானம்பாடியில் பல வகையான கவிதைகள் வந்திருக்கு. அது அவருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் வானம்பாடி இதழ் நின்று போன கொஞ்சகாலம் கழித்து இது போன்ற எல்லா வகையான கவிதைப் போக்குகளையும் அவர்தான் முந்திக் கொண்டு ஆதரித்தார். சுந்தரராமசாமி கவிதை உட்பட. இது என்ன என்றே என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் இதில் எனக்கு உடன்பாடுதான். இந்தக் கருத்து எனக்கு ஏற்கனவேயிருந்தது. இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கருத்து இருக்கும் அது அவர்களுடைய சுதந்திரம். இதுதான் என்னுடைய கருத்தும் கூட. ஆனால் இதை நான் சொன்ன போது ஞானி ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்த்தார். எதையெல்லாம் பூர்ஷ்வா படைப்பு என்று சொன்னாரோ அதையெல்லாம் அதன் பிறகு ஆதரிக்க துவங்கினார். அதன் பிறகுதான் ஞானியை மற்றவர்கள் அங்கீரிக்க ஆரம்பித்தார்கள். சுந்தரராமசாமி, ஞானகூத்தன் போன்றவர்களின் படைப்புகளை பற்றியெல்லாம் இவர் மறுபார்வை பார்க்கத் துவங்கினார். அந்த மறுபார்வை ஆரோக்யமானது. இதைப் பார்த்தவுடன் சுந்தரராமசாமி, ஞானகூத்தன் போன்றவர்கள் ஞானி மாதிரி திறந்த மனம் உடையவர்கள் யாருமில்லை என்று பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.



ரசனை: எழுத்து, கசடதபற, மீட்சி, கொல்லிப்பாவை, போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கும் வானம்பாடியில் எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கும் இடையே எது கவிதை என்று ஒரு சர்ச்சை நிகழ்ந்து கொண்டிருந்தது அது பற்றி கூற முடியுமா?

சிற்பி: வானம்பாடி என்ற கட்டு உடைந்தவுடனேயே அந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து விட்டது. வானம்பாடி எல்லாத் தரப்புக் கவிதைகளுக்கும் இடமளிக்கக் கூடிய இதழாகத்தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை இது போன்ற மாற்றுச் சிந்தனைகளை ஆதரிக்க கூடியவனாகத்தான் இருந்திருக்கிறேன். ஞானக்கூத்தன் கவிதைகள் எனக்கும் பிடிக்கும். அவைகளைப் பற்றி மேடையில் பேசியிருக்கிறேன். சுந்தரராமசாமி கவிதைகளும் அப்படித்தான். ஆனால் மேடையில் அவர்கள் எங்களை விமர்சனம் செய்து பேசுவதும் எழுதுவதும் தொடர்ந்தது. இப்போதும் ஜெயமோகன் போன்றவர்கள் வானம்பாடி கவிதைகளைப் பற்றி சவுக்கடியோடுதான் விமர்சனம் செய்வார்கள். வானம்பாடியில் நல்ல கவிதைகள் நிச்சயமாக எழுதப்பட்டன. எல்லோருடைய கவிதைகளும் நல்ல கவிதை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருமையான கவிதைகள் வெளிவந்துள்ளன. ஒரு கவிஞர் “வெந் துயர் முள் மன வேலிகளில்” என எழுதினார். இப்போது ஈழத்தமிழர்கள் முள்வேலிக்கு பின்னால் இருப்பதை பார்க்கும் போதெல்லாம் இந்தக் கவிதை எனக்கு ஞாபம் வரும். இப்படி நல்ல கவிதைகள் எழுதியவர்கள் எல்லாம் பின்னால் எழுதாமல் போய்விட்டார்கள். ஆனால் எது கவிதை என்பதில் ஒரு சர்ச்சை அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது.

ரசனை: வானம்பாடி என்பது ஒரு கவிதை இயக்கமாக இருந்ததா? அல்லது அந்த இதழுக்கான பெயராக மட்டும் இருந்ததா?

சிற்பி: வானம்பாடி என்ற பெயர் இதழின் பெயர் என்றாலும் அது ஒரு கவிதை இயக்கமாகத்தான் இருந்தது. பெரிதும் மார்க்சிய சிந்தனை உடைய ஒரு கவிதை இயக்கமாக இருந்தது. நிறையப் பேரை கவிதை எழுதத் தூண்டிய ஒரு இயக்கமாக வானம்பாடி இயக்கம் இருந்தது. இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு கவிதை எழுத யோசித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் கவிதை எழுத வைத்தது. புதுக்கவிதை பேச்சு மொழிக்கு சமமாக இருந்ததால் பரவலாக வாசிக்கப்பட்டது. கவிதைகளை வெளியிடக்கூடிய பல சிற்றிதழ்கள் வெளிவருவதற்கு வானம்பாடி இதழ் ஒரு முன்னோடி எனலாம். வானம்பாடி இதழ் முழுக்க முழுக்க கவிதைகள் மட்டுமே வெளிவரக்கூடிய இதழாக இருந்தது. நான் தான் இடையில் நேர்காணல், மொழிபெயர்ப்பு என்று கொஞ்சம் இயங்கினேன். இந்த இயக்கத்தில் விமர்சகர்கள் பலர் இருந்த போதும் இதழில் மிகுதியாக விமர்சனங்கள் இடம் பெறவில்லை. வந்த சில விமர்சனங்கள் கவனத்துக்குள்ளாகவில்லை.

ரசனை: வானம்பாடி இயக்கம் நின்று போன பிறகும் அதில் இயங்கிய பலர் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று இருக்கிற புதிய தலை முறை கவிஞர்களோடு சேர்ந்து மீண்டும் ஒரு கவிதை இயக்கமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏன் தோன்றவில்லை?

சிற்பி: அதற்கு காரணம் வயது. அந்த வயதில் இருந்த வேகம் இப்போது இல்லை. இந்தத் தளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதன்பிறகு ஏனோ எந்த இயக்கமும் இங்கு தோன்றவில்லை. சிலர் உதிரி உதிரியாக சிறு குழுக்களாக தோன்றினர் ஆனால் அது எதுவும் தனித்தன்மையான இயக்கமாக மாறவில்லை. வானம்பாடி இயக்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து இயங்க பணிகள் தடையாக இருந்தன என்றாலும் சி.ஆர்.ரவீந்திரன் நாவலில், தமிழ்நாடன் சிற்ப, ஓவிய, பழைய நூல் கண்டெடுத்தல் முதலிய துறைகளில், புவியரசுவும் நானும் கவிதை மற்றும் மொழிபெயர்ப்பில் என அவரவர்கள் இலக்கியத்தில் தனித்தனியாக தங்களது பங்களிப்பை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ரசனை: இப்போது அதிகமான எண்ணிக்கையில் பெண்கவிகள் கவிதைகளை எழுதி வருகிறார்கள். அவர்களின் கவிதைகளில் பெண் உடலரசியல் வெளிப்படையாக பேசப்படுகிறது. இது ஆபாசம் என சில கவிஞர்களால் விமர்சிக்கப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கறீர்கள்?

சிற்பி: பிரச்சனைகளின் அடிப்படையில் உருவானவர்கள் பெண்ணியக் கவிஞர்கள். அவர்களால் ஒரு மொழியை வார்த்தெடுக்க முடிந்திருக்கிறது. கனிமொழியின் மொழி வேறு, உமா மகேஸ்வரியின் மொழி வேறு, சல்மாவின் மொழி வேறு என அடையாளம் காண முடியும். ஆண் கவிஞர்களைக் காட்டிலும் பெண் கவிஞர்கள் தங்களுக்கென்று அடையாளம் காட்டும் ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக குட்டி ரேவதியின் கவிதை மொழி. ஆண் கவிஞர்களில் இப்படி தனித்துவமாக இருக்க கூடியவர்கள் குறைவு. பெண் கவிஞர்கள் சில விஷயங்களைக் கவிதைகளில் வெளிப்படையாக எழுதுகிறார்கள் என்பதால் யாரும் விமர்சிக்க முடியாது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் சுதந்திரத்தை முழுமையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இதை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. அவர்களும் இதையையே எழுதிக் கொண்டிருக்க போவதில்லை. மற்ற விஷயங்களை அவர்கள் எழுத முன்வரும் போது நன்றாகத்தான் எழுதுவார்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால் சாகித்ய அகாடெமி அமர்வுகளுக்காக பெங்களூர், கோவா போன்ற இடங்களில் சல்மாவை அழைத்து கவிதை வாசிக்கச் சொன்னோம். எல்லா இடத்திலும் யோனி குறித்த ஒரு கவிதையைத் தவறாமல் வாசிக்கிறார். தமிழில் அவர் வாசிக்கிறார். அதையே ஆங்கிலத்தில் இன்னொருவரை வாசிக்கச் சொல்கிறார். அகில இந்திய அளவில் சல்மா, கனிமொழி, குட்டி ரேவதி, அ.வெண்ணிலா போன்றவர்களை அறிந்திருக்கிறார்கள். பெண் கவிஞர்களுக்கு மேடையில் கவிதை வாசிப்புத்திறன் போதாது. இதில் தமிழச்சி தங்கபாண்டியன் மாறுபட்டவர். காரணம் அவர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் அந்த வெளிப்பாடு இருக்கிறது. இன்றைக்கு பெண் எழுத்து என்பது குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்திருக்கிறது என்றுதான் சொல்லுவேன். இதில் சல்மா, உமா மாகேஸ்வரி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அ.வெண்ணிலா, ஈழத்துப் பெண்கவிஞர் அனார், குட்டி ரேவதி, மாலதி மைத்ரி போன்றவர்கள் தனித்துவமான மொழி நடை பெற்ற கவிஞர்கள் என்று உறுதியாக நான் சொல்வேன்.

ரசனை: கவிதை, கட்டுரை என்று இரு வடிவங்களுக்குள்ளேயே நின்று விட்டீர்கள். ஏன் சிறுகதை, நாவல் என முயற்சிக்கவில்லை?

சிற்பி: என்னுடைய கவிதைகளில் கதைத் தன்மை இருக்கும். சிறுகதை பாணியில் எழுதியிருக்கிறேன். ஆனால் சிறுகதை, நாவல் எனப் பயணப்படவில்லை. ஜெயகாந்தன் ஒரு குறுநாவலையாவது எழுதுங்கள் என வற்புறுத்தினார். நான் எனக்கு கதை எழுத வராது என்று சொன்னேன். எல்லோரிடத்திலும் ஒரு கதை இருக்கு அதை நீங்கள் நினைத்தால் எழுதலாம் என்று சொன்னார். இருக்கலாம். ஆனால் கதைக்குரிய லாவகத்தோடு எழுத முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. பொதுவாக நாவல், சிறுகதை வாசிப்பதை விட நான் தேடிப் படிப்பது கவிதைதான். சமீபத்தில் ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பை படித்தேன் மிகச் சிறப்பாக உள்ளது. அதிகம் விவாதிக்கப்படும் நாவல்களை நிச்சயம் படிப்பேன்.

ரசனை: இப்போது எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களில் யாரை சிறப்பானவர்களாக குறிப்பிடுவீர்கள்?

சிறுகதையைப் பொறுத்தவரை இப்போது நிறையப் பேர் எழுதுகிறார்கள். நாவலில் ஜே.டி.குரூஸின் ஆழி சூழ் உலகு, ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ஆகிய நாவல்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியவை. ஆனால் நாவலை ஒரு கலைஓவியமாக்கி அதை வாசிக்கும் வாசகனைத் தன்வயப்படுத்தி இழுத்துக் கொண்டு போகும் எழுத்தாளர் என்றால் அது எஸ்.ராமகிருஷ்ணன்தான். அவரது கதைகள், கட்டுரைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும். அப்படியொரு வசீகரமான நடையில் எழுதும் எழுத்தாளர் அவர். ஜெயமோகனின் கதைகளில் எனக்கு முழு ஈடுபாடு வரவில்லை. காரணம் ஏனென சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒரு மனத்தடை இருக்கு. தேவையில்லாமல் கதையை ரொம்ப பெரிதாக எழுதுகிறாரோனு தோணுது. அவர் எழுதியதில் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலும் காடு நாவலும் எனக்குப் பிடித்திருந்தது. பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலில் கம்யூனிசத்தின் மீது விமர்சனங்களை வைக்கிறார். அதை ஏன் எப்படி என்கிற கேள்விகளோடு கொண்டு போகும் விதம் பிடித்திருந்தது. காடு ஒரு கச்சிதமான நாவல். விஷ்ணுபுரம் எனக்கு குழப்பமாகத்தான் இருந்தது அதன் பிறகு கொற்றவை அதை அவர் கவிதை என்று வேறு சொல்கிறார். ஆனால் அது கவிதையில்லை உரைநடைதான். சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் டெக்னிகலி வித்யாசமான நாவல் ஆனால் ஒரு புளிய மரத்தின் கதையை ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு நாவல் எனலாம். வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம், பாரதியின் வேப்பமரம் என்ற கதைகளின் தூண்டுதலோ என்னவோ ஒரு புளிய மரத்தின் கதை நாவலில் இதன் பாதிப்பு அவருக்குள்ளும் இருந்திருக்கலாம். அதோடு சுந்தரராமசாமியின் கதைப்பாணி அழுத்தமாக இருப்பதால் இது ஒரு நல்ல நாவல். ஆனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற நாவலை படிக்க முடியவில்லை. அவரது மற்ற நாவல்களோடு இதை ஒப்பிட முடியவில்லை. ஆனால் அவரது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவரது நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பு எனை மிகவும் கவர்ந்தது. அதில் அவர் ‘காலம்’ என ஒரு கவிதை எழுதியிருப்பார். அந்த பாதிப்பில் நானும் ‘காலம்’ எனும் ஒரு கவிதை எழுதினேன். எனது பூஜ்யங்களின் சங்கிலி என்ற கவிதைத் தொகுதி கூட காலம் பற்றியதுதான். அந்த கவிதைக்கான தூண்டுதலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் சுந்தரராமசாமியின் கவிதையும் ஒரு அடிப்படையான காரணம்.

காலமோ
மாயை என்றான் சங்கரன்
லீலை என்றான் அரவிந்தன்
அறிந்தறிந்தும் பாகனையே
கொல்லும் யானையது... என்று ஆரம்பிக்கும் அக்கவிதை.

குறையாத ஜாடியினின்றும்
நிறையாத ஜாடிக்குள்
வில்லாய் வளைந்து விழும்
கட்டித்தேன் பெருக்கு ... என்று கூறும் பாங்கு மிக ஆழமானது.

விளங்க முடியாததை விளங்குவதற்கான முயற்சி அந்தக் கவிதை. சொல்லுக்குள் அடங்காத கால தத்துவத்தை அந்தக் கவிதையில் சொல்கிறார்.

தமிழில் குறைவான கவிதைகள் எழுதியிருந்தாலும் நிறைவான கவிதைகள் சுந்தரராமசாமியின் கவிதைகள். அவரின் காகங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். அவரது வீட்டில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கி நிறைய உரையாடியிருக்கிறேன். அன்போடு உபசரிக்கக் கூடிய நண்பர். ஒரு முறை திருவனந்தபுரத்தில் பத்து நாட்கள் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் உள்ள கவிதைகள் மொழி பெயர்ப்பு நடந்தது. அதில் தமிழ்க் கவிதைகளை தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்பு செய்வதில் நான், சுந்தரராமசாமி, க.நா.சு, அப்துல்ரகுமான் ஆகியோர் இருந்தோம். அப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் சில கூட்டங்களில் அவரை விமர்சனம் செய்து பேசியிருக்கிறேன். அதையெல்லாம் கேள்விப்பட்டு எனக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தார். இது குறித்து நேரில் சந்தித்த போது கேட்டார். நான் சொன்னேன் தமிழ் பேராசிரியர்களுக்கு இலக்கியம் குறித்து ஒன்றும் தெரியவில்லை என நீங்கள் பேசியதற்குதான் பதில் கூறியிருந்தேன். பேராசிரியர் பணி என்பது ஒரு தொழில் அதில் ஈடுபாடோடு செய்கிறவர்களும் உண்டு. அப்படி செய்யாதவர்களும் உண்டு. ஆசிரியர்களாக இருப்பவர்கள் நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டுமே தவிர நல்ல இலக்கியவாதிகளாக இருக்க வேண்டியதில்லை. அதில் சிறந்த இலக்கியவாதிகளும் இருந்திருக்கிறார்கள். தெ.போ.மீ., வையாபுரிப்பிள்ளை போன்றவர்களும் பேராசிரியர்கள்தான் அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை எனக்கூற முடியுமா? எல்லாத் துறைகளிலும் வல்லுனர்களும் இருக்கிறார்கள். அப்படி அல்லாதவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் ஒட்டுமொத்தமாக பேராசிரியர்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது எனச் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது எனச் சொன்னேன்.

ரசனை: தமிழ்ப் பேராசிரியர்கள் குறித்து சு.ரா. சொன்ன அதே கருத்தை இப்போதும் கோவை.ஞானி மேடைகளில் பேசி வருகிறாரே...

சிற்பி: அதற்கும் இதே பதில்தான். ஏனெனில் பேனர் வரைபவரும் இருக்கிறார். ஓவியம் வரைபவரும் இருக்கிறார். இதில் பேனர் வரைபவர்கள் அதிகம். ஓவியம் வரைபவர்கள் குறைவு. எல்லாத் தொழில்களிலும் இது உண்டு. ஆனால் ஆசிரியத் தொழிலை செய்கிறவர் அவரது பணியைச் சிறப்பாக செய்தால் போதும். பேராசிரியர்களாக இருந்தவர்கள் பலர் சிறந்த இலக்கிய படைப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள் என என்னால் அடையாளம் காட்ட முடியும். இது எல்லாத் தொழில்களிலும் இருந்து வருகிற நிலை. எல்லோருமே நவீன இலக்கியத்தை போற்றுவார்கள் என எதிபார்க்க முடியாது.

ரசனை: தமிழ்க்கவிஞர்களில் படைபிலக்கியத்திற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் இரண்டு சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றிருப்பவர் நீங்கள் இது எப்படி சாத்தியப்பட்டது?

சிற்பி: என்னைப் போன்றே நீல.பத்மநாபன், புவியரசு போன்றவர்கள் இரண்டு விருதுகள் பெற்றுள்ளார்கள். ஆனால் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. காரணம் பொள்ளாச்சியில் ஒதுக்குபுறமாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். ஆகவே எனக்கு மையமான இந்தக் களங்களோடு தொடர்பு கிடையாது. “பக்தி செய்து பிழைக்க சொன்னாள் பயன் எண்ணாமல் உழைக்க சொன்னாள்...” என்று பாரதி சொன்னான். அதே மாதிரி பயன் கருதி எதையும் நான் எழுதுவதில்லை. விருதுகள்தான் முக்கியம் என்றால் இலக்கியத்தில் இருக்கத் தேவையில்லை. அரசியலுக்கு போனால் எல்லா விருதுகளும் கிடைக்கும். எனக்கு சாகித்ய அகாடமி விருது தாமதமாகத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது அதற்காக நான் குறைபட்டுக்கொள்ளவும் மாட்டேன். கிடைத்து விட்டது என்று கொண்டாடவும் மாட்டேன்.

ரசனை: உங்கள் கவிதை தொகுப்புகளில் சர்ப்ப யாகம் நல்ல கவிதைத் தொகுதியாக பேசப்பட்டது. அதற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

சிற்பி: நீலபத்மநாபனுக்கு தலைமுறைகள் நாவல் வந்திருந்த போதே கொடுத்திருக்க வேண்டும். அதே போல பள்ளி கொண்டபுரம் அவருடைய நல்ல நாவல் அதற்கெல்லாம் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். அது பற்றி ஒரு குறைபாடு அவருக்கு இருந்தது. அவரே சாகித்ய அகாடமியின் கன்வீனராக இருந்தார். அதன் பிறகு இலையுதிர் காலம், தூண்டில், கூண்டினுள் பட்சிகள் போன்ற நாவல்களை எழுதினார். பிறகு நான் அகாடமி பொறுப்பேற்ற போது அவருக்கு விருது கிடைத்தது. அதாவது, அதற்கு முன் இருந்த கமிட்டி அவருக்கு விருது கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். பரிசு வழங்கும் போது நான் பொறுப்பில் இருந்தேன். நீலபத்மநாபனுக்கு விருது கொடுக்க வேண்டும் என நான் பொறுப்பில் இல்லாத போதே விரும்பியிருக்கிறேன். அதே மாதிரி சுந்தரராமசாமிக்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காமல் போனதற்கு சாகித்ய அகாடமி அமைப்பை அவர் கடுமையாக விமர்சனம் செய்ததும் ஒரு காரணம். சரஸ்வதி சம்மான் என்ற பிர்லா அவார்டு கமிட்டியில் நான் மூன்றாண்டுகள் இருந்தேன். அதன் பரிசு தொகை அப்போதே 5 இலட்சம். சுந்தரராமசாமியின் நூலை தேர்வு செய்து அனுப்பவது என முடிவெடுத்துக் கண்ணனிடம் சொன்னேன். அவர் சு.ரா.வின் கவிதை நூல் ஒன்றை அனுப்பி இருந்தார். அதைப் பார்த்ததுமே பெரிய ஏமாற்றமாக போய்விட்டது. காரணம் அந்தத் தொகுப்பில் கவிதை எழுதிய மாதம் வருடம் ஒவ்வொரு கவிதைக்கு கீழும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குறிப்பிட்ட ஆண்டு வரையறை ஏற்புடையதாக இல்லை எனவே அதை விருதுக்கு தேர்வு செய்ய இயவில்லை. நீலபத்மநாபனின் பள்ளி கொண்டபுரம் நாவலை அனுப்பினோம் ஆனால் அதற்கு அந்த வருடம் பரிசு கிடைக்கவில்லை. அடுத்த வருடம் இந்திரா பார்த்தசாரதியின் இராமானுஜர் நாடகத்தை தேர்வு செய்து அனுப்பினோம். அதற்கு விருது கிடைத்தது. இறுதித் தேர்வுக்கு அனுப்ப என் முயற்சியும் இருந்தது. இந்திரா பார்த்தசாரதி டெல்லியில் பல காலம் இருந்ததால் அவரைப் பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த மாதிரியான பரிசுகளை பெறுவதற்கு பரிந்துரைகள் மட்டும் போதாது. அந்த படைப்பாளியின் படைப்பும் அவரைப்பற்றிய அறிமுகமும் சிறப்பாக இருக்க வேண்டும். ஞானபீடம் விருத்துக்கும் அப்படித்தான். நாம் ஞானபீட விருதுக்கு தமிழ்த் தேர்வுக் குழுவிலிருந்து தேர்வு செய்து அனுப்பும் நூல்களில் பன்முறை கலைஞருடைய புத்தகம் பரிந்துரை செய்து அனுப்பட்டது. அங்கிருப்பவர்கள் இதைப்பார்த்து என்னப்பா இது அரசியல் தலைவரின் புத்தகத்தையே அனுப்பி கொண்டு இருக்கிறாங்க எனச் சலித்து கொள்வார்களாம். இது எனக்கு அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னது. தமிழுக்கு அந்த வருடம் கொடுத்தாக வேண்டும் என முடிவு செய்திருக்கிற நிலையில் ஜெயகாந்தனுக்கு கொடுக்கப்பட்டது. உண்மையில் ஞானபீட விருது பெற்ற பிற மொழி எழுத்தாளர்களை விட தமிழ் எழுத்தாளர்கள் தரம் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எனது கருத்து.


ரசனை: சாகித்ய அகாடமி விருது கமிட்டியில் முக்கியமான பொறுப்புகளில் இருந்திருக்கிறீர்கள். இப்போதும் இருந்து வருகிறீர்கள். ஒவ்வொரு முறையும் இந்த விருது அறிவிக்கப்படும் போது சர்ச்சைகள் எழுகிறது. தகுதியான படைப்பாளிக்கு இந்த விருது கொடுக்கப்படுவதில்லை அரசியல் நோக்கம் இருக்கிறது என்றெல்லாம் விமர்ச்சிக்கப்படுகிறது இந்த விமர்சங்கள் எந்த அளவிற்கு உண்மையானது?

சிற்பி: சாகித்ய அகாடமி விருதைப் பொறுத்தவரை அரசியல் ஏதும் இல்லை. அதில் இடம் பெற்றிருக்கிற ஜீரிகளைப் பொறுத்துதான் யாருக்கு விருது என முடிவாகிறது. விளக்கமாக சொல்லவதென்றால் பொதுவாக சாகித்ய அகாடமி அமைப்பு ஒரு பட்டியலை முடிவு செய்யும், எதன் அடிப்படையில் அந்த பட்டியல் தயாராகிறது என்பது யாருக்கும் தெரியது. சாகித்ய அகாடமியில் ஒவ்வொரு மொழியிலும் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பல்கலைக்கழகங்கள் மூலமும் ஒருவர் இலக்கிய அமைப்புகள் மூலமும் மற்றவர் அரசு சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழைப் பொறுத்தவரை பாண்டிச்சேரியில் இருந்தும் ஒருவர் வருவார். இப்போது நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம். நான், இ.ரா. மோகன், இராம.குருநாதன் பாண்டிச்சேரியிலிருந்து மகரந்தன் ஆகியோர் இருக்கிறோம். பிறகு ஆலோசனைக்குழு ஒன்று இருக்கிறது. இந்த நான்கு பேரும் பொதுக்குழு உறுப்பினர்கள். அதிலிருந்து நான் செயற்குழுவுக்குப் போனேன். 2008 முதல் 5 ஆண்டுகள் நான் செயற்குழுவில் இருப்பேன். செயற்குழுவில் இருப்பவர் தமிழ்ச் சாகித்யஅகாடமியின் ஒருங்கிணைபாளரும் கூட. தமிழ் ஆலோசனைக் குழுவில் ஆறு பேர் இருக்கிறார்கள் ஆக மொத்தம் பத்து பேர். இந்த பத்துப் பேரும் துவக்க நிலைப்பட்டியலாக ஆளுக்கு இருபது புத்தகங்களை தேர்வுக்காக பரிந்துரைப்பார்கள். இந்த ஒட்டுமொத்தப் பட்டியலும் தலைவரிடம் இருக்கும். இந்தப் பட்டியலில் மேலும் சுருக்கப்பட்டு 10 புத்தகங்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். இதில் பரிசுக்குறிய புத்தகங்களை தேர்வு செய்ய மூன்று நடுவர்களை தேர்வு செய்கிறார்கள். ஒருவர் இலக்கிய விமர்சகர், ஒருவர் படைப்பாளர், ஒருவர் கல்வியாளர், இவர்கள்தான் இந்த விருதை தேர்வு செய்கிற அமைப்பு. நடுவர்கள் யார் பரிசுக்கு யாரைத் தேர்வு செய்வார்கள் என்பதை எல்லாம் நாம் யூகிக்க முடியாது. அவர்கள் மூவரும் சேர்ந்து இறுதி முடிவை எடுப்பார்கள். அதனால் ஒரு புத்தகம் இறுதிப் பத்து புத்தகங்கள் பட்டியலுக்கு தேர்வாக வேண்டும் பிறகு மூன்று நடுவர்களில் மூவர் அல்லது ஏதேனும் இருவர் இந்த புத்தகத்திற்கு பரிசு கொடுக்கலாம் என பரிந்துரைக்க வேண்டும். அதன் பிறகே பரிசுக்குரியவர் யாரென முடிவாகிறது. இத்தனை விஷயங்கள் இருக்கிறது இதில். இதை எல்லாம் தாண்டி ஒரு நல்ல எழுத்தாளருக்கு விருது கிடைக்கவில்லை எனில் நாம் என்ன செய்யமுடியும். அது மூன்று நடுவர்கள் கையில்தான் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளருக்குக் கண்டிப்பாக இதில் கருத்துச் சொல்ல இடமில்லை.


ரசனை: வானம்பாடி படைப்பாளிகளில் முக்கியமான கவிஞர்கள் எல்லோரும் சாகித்ய அகாடமி விருது வாங்கி விட்டார்கள். கோவை.ஞானிக்கு ஏன் தரப்படவில்லை?

சிற்பி: ஞானிக்குக் கொடுக்கப்படவில்லை என்பதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அவரது புத்தகம் இறுதிப்பட்டியலுக்கு வராமல் இருந்திருக்கலாம். நான் இருமுறை நடுவராக இருந்த போது அவருடைய நூல் வந்ததாக நினைவில்லை. ஆனால் ஒரு திறனாய்வாளர் என்ற முறையில் ஞானி விருது பெற முற்றிலும் தகுதி உடையவர்தான். பல சமயங்களில் நடுவர் குழுவில் இருக்கும் ஒருவர் விரும்பினால் கூட பரிசு தரமுடியாமல் போகலாம். ஞானியும் சண்பகம் ராமசாமியும் நடுவர்களாக இருந்த போது என் ‘சூர்ய நிழல்’ பரிசு பெற முடியவில்லை. புவியரசு நடுவராக இருந்த போதும் என் புத்தகம் இருந்தது. அவராலும் பெற்றுத் தர முடியவில்லை. அதனால் நண்பர்களே நடுவர்களாக இருந்தாலும் விருதைத் தூக்கித் தந்து விட முடியாது. நடுவர் குழுவில் ஏற்படும் சிக்கல்கள் அப்படிப்பட்டவை.
ரசனை: மொழிபெயர்ப்புகான சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறீர்கள். உங்கள் மொழி பெயர்ப்பு அனுபவங்களை சொல்லுங்கள்?

சிற்பி: நான் முதலில் ஆங்கிலத்திலிருந்துதான் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருந்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். காரணம் மலையாளம் எனது இரண்டாவது தாய்மொழி, மலையாளத்திலிருந்துதான் நான் அறிவையே பெற்றேன். அதனால் மலையாளத்திலிருந்து சில விஷயங்களை மொழி பெயர்க்க வேண்டும் என முடிவு செய்தேன். அப்படித்தான் சச்சிதானந்தன் கவிதைகளை மொழிபெயர்த்தேன். அதன் பிறகு சாகித்ய அகாடமியில் இருந்து லலிதாம்பிகா அந்தர்ஜனம் அவர்களின் அக்கினி சாட்சி நாவலை மொழி பெயர்க்க சொன்னார்கள். எனது மொழி பெயர்ப்பு அனுபவங்களிலேயே மிகக் கடுமையானது அது தான். அவர் கவிதைகள்தான் அதிகம் எழுதியிருக்கிறார். இது ஒன்றுதான் அவருடைய நாவல். நம்பூதிரி குடும்பத்தில் பெண்களுக்கு இருக்க கூடிய கட்டுப்பாடுகள், நெருக்கடிகளைப்பற்றியது இந்நாவல். இந்த நாவலில் பயன்படுத்த பட்டிருந்த மொழி கடுமையாக இருந்தது. நம்பூதிரி குடும்பத்தை பற்றிய நாவல் என்பதால் அந்த சமூகத்தில் வழக்காற்றில் பயன்படுத்த கூடிய சொற்கள் இதில் அதிகம் பயன்படுத்தப் பட்டிருந்தது. அதனால் அதை மொழி பெயர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். எர்ணாகுளத்தில் வாழும் டாக்டர்.லீலாவதி எனக்கு பழக்கம். அவங்க மலையாளக் கவிதை வரலாற்றைப் பற்றி ஒரு சிறப்பான நூலை எழுதியிருக்காங்க. அவர்களிடம் இதைப் பற்றி சொன்ன போது நம்பூதிரி வழக்காற்று சொற்கள் பற்றி ஒரு அகராதியிருக்கிறது அது இப்போது கிடைப்பதில்லை. நான் எப்படியாவது ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த அகராதியை பார்த்த பிறகுதான் அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்கு அர்த்தம் தெரிந்தது. அதை வைத்துதான் அந்த நூலை மொழிபெயர்த்தேன். ஓ.என்.வி.குரூப் அவர்களின் உஜ்ஜையினி நூலை மொழிபெயர்த்தேன். எம்.டி.வாசுதேவநாயருடைய இரண்டாம் ஊழம் என்ற நாவலை அவர் கேட்டுக் கொண்டதால் நான் மொழிபெயர்க்கத் தொடங்கிய நிலையில் சாகித்ய அகாடமியில் வேறொருவரை வைத்து அதை முடிச்சிட்டாங்க அதனால் அது பாதியிலேயே நின்னு போச்சு அதற்கு வாசுதேவநாயர் வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதன் பிறகு அவரது வாராணசி என்ற நாவலை மொழிபெயர்ப்பு செய்தேன். எனக்கு பிடித்த மொழி பெயர்ப்பென்றால் தாஸ்தாயெவ்ஸ்கியின் வரலாற்றின் ஒரு பகுதியை பாப்புலர் நாவலிஸ்ட் ஒருவர் நாவலாக எழுதியிருக்கிறார். அவர் பெயர் பெரும்படவம். ஸ்ரீதரன் அந்த நாவல் மலையாளத்தில் பல பதிப்புகள் கண்டது. அதைத் தமிழில் நான் மொழி பெயர்த்தேன். அதன் வெளியீட்டு விழாவில் சுந்தரராமசாமி கலந்து கொண்டார். எனது மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது என பாராட்டினார். அது எனக்கு பெருமையாக இருந்தது. இப்படி என்னையறியாமல் மொழி பெயர்ப்புக்குள் இறங்கியிருக்கிறேன். இப்போது மாத்ருபூமியின் மேனேஜிங் டைரக்டர்.வீரேந்திரக்குமார் எழுதிய ‘ஹைமவதபூவில்’ இதை நான் வெள்ளிப்பனிமலையின் மீது என மொழி பெயர்த்திருக்கிறேன். மலையாள தலைப்பு குமாரன் ஆசானுடையது அதனால் பாரதி வரியைப் பயன்படுத்தலாமே என விஜயகுமார் குனிசேரி சொல்ல இத்தலைப்பு அமைந்தது.

ரசனை: தமிழ் எழுத்தாளர்களில் சாரு நிவேதிதாவின் மலையாள மொழி பெயர்ப்பு நாவல்கள் கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதாக சொல்ல படுகிறதே?

சிற்பி: சாருவின் ஜீரோ டிகிர் நாவல் அங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சாரு நிவேதிதா என்ற பெயர் அங்கு அறியப்பட்டிருக்கிறது. மற்றபடி அவுட் ஸ்டேண்டிங்காக இருக்கு என்று அங்கு பேசப்பட்டதாக சொல்ல முடியாது. பாமாவின் சங்கதி நாவலை விஜயக்குமார் குனிசேரி மொழி பெயர்த்திருக்கிறார். இங்கிருந்து போன நாவல்களில் அது அங்கு மிக நன்றாகப் பேசப்படுகிறது.

ரசனை: தமிழில் உள்ள நல்ல படைப்புகளை மலையாளத்தில் நீங்களே மொழி பெயர்ப்பு செய்யலாமே?

சிற்பி: என்னால் தமிழில்தான் சிறப்பாகச் செய்யமுடியும். மலையாளத்தில் அவ்வளவு நன்றாகச் செய்ய இயலாது. நீல.பத்மநாபன் போல் இரு மொழிகளிலும் நன்றாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் செய்தால்தான் சிறப்பாக இருக்கும்.

ரசனை: இதுவரை நடந்து முடிந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடுகளுக்கும் கோவையில் வரும் ஜீன் 2010 ல் நடக்க உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கும் உள்ள வித்யாசம் என்ன? இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள் எழுந்து வருகிறது?

சிற்பி: இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள் உலகத் தமிழ்ச் சங்கத்தின் அனுமதியோடு நடத்தப்பட்டவை. ஓராண்டு கூட அவகாசம் இல்லாமல் இம்மாநாட்டை நடத்த இயலாதென உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் சொல்லியிருக்கிறார் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பத்து பேர். அதில் ஆறு பேர் நடத்தலாம் என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதில் கா.சிவத்தம்பியும் ஒருவர். ஆனால் அந்த அமைப்பின் தலைவரும், துணைத்தலைவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை அப்படியெனில் இந்த மாநாட்டை நடத்த இயலாது. ஆனால் சட்டப்படி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடாக இதை நடத்த முடியாது. என்னதான் அந்த அமைப்புக்குள் இருப்பவர்கள் ஒப்புதல் தெரிவித்தாலும் தலைவரின் ஒப்புதல் இன்றி இதை நடத்த முடியாது. அதனால்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என பெயர் வைத்திருக்கிறார்கள். உலகத் தமிழ் மாநாடு என்ற தோற்றத்தில் இதை நடத்த விரும்புகிறார்கள்.

ரசனை: க.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் இதற்கு வருவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்களே?

சிற்பி: பெரியவர்.கா.சிவத்தம்பி மாநாட்டில் கலந்து கொள்ள வருவதாக சொல்லியிருப்பது வியப்பும் மகிழ்ச்சியும் தருகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அந்தரங்கத்தில் அரசியல் இருக்கக்கூடும் அது குறித்து நான் எதுவும் கூறுவதற்கில்லை. ஆனால் இது மொழி ஆய்வு தொடர்பான மாநாடு நம் காலத்தில் மொழிக்கு நன்மைகள் விளைய வாய்ப்பு எப்படி எவ்வகையில் நேர்ந்தாலும் அது வரவேற்புக்குரியது. அந்த வகையில் பெரியவர். கா.சிவத்தம்பி நினைப்பது போலவே நானும் நினைக்கிறேன். http://poetthenpandian.blogspot.com/



    சிற்பி:

பெயர்: பொ.பாலசுப்பிரமணியம்
புனைபெயர்: சிற்பி
பிறந்த இடம்: ஆத்துப்பொள்ளாச்சி, பொள்ளாச்சி, கோவை (29.7.1936)
படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

    * நிலவுப்பூ - 1963
    * சிரித்த முத்துக்கள் - 1968
    * ஒளிப்பறவை – 1971
    * சர்ப்பயாகம் - 1976
    * புன்னகை பூக்கும் பூனைகள் - 1982
    * மேளன மயக்கங்கள் - 1982
    * சூரிய நிழல் - 1990
    * இறகு -  1996
    * சிற்பியின் கவிதை வானம் - 1996
    * பாரதி என்றொரு மானுடன்- 1997
    * ஒரு கிராமத்து நதி - 1998
    * மருத வரை உலா – 1998
    * நாவரசு - 1998
    * பூஜ்யங்களின் சங்கிலி – 1999
    * பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு - 2001
    * அருட்பா அமுதம் – 2001
    * படைப்பும் பார்வையும் - 2001
    * கவிதை மீண்டும் வரும் – 2001
    * நேற்றுப் பெய்த மழை - 2003
    * மூடுபனி - 2003
    * காற்று வரைந்த ஓவியம் - 2005
    * தேவயானி – 2005
    * மகாத்மா – 2006
    * தொண்டில் கனிந்த தூரன் - 2006

மொழிபெயர்ப்புக்கள்:

    * தேனீக்களும் மக்களும்  - 1982
    * அக்கினிசாட்சி - 1996 -  மொழிபெயர்ப்பு நாவல்
    * A Noon in Summer – 1996 -  சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு
    * சச்சிதானந்தன் கவிதைகள்- 1998
    * உஜ்ஜயினி – 2001
    * வாரணாசி - 2005
    * சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் - 2006

கட்டுரைத் தொகுப்புக்கள்:

    * மகாகவி பாரதி – சில மதிப்பீடுகள் - 1982
    * இலக்கியச் சிந்தனை – 1989
    * மலையாளக் கவிதை – 1990
    * ஆதிரை – 1992
    * இல்லறமே நல்லறம் - 1992
    * பாரதி – பாரதிதாசன் படைப்புக்கலை – 1992
    * திருக்குறள் சிற்பி உரை - 2001
    * தமிழ் உலா – 1,2 – 1993
    * அலையும் சுவடும் - 1994
    * மின்னல் கீற்று - 1996
    * சிற்பியின் கட்டுரைகள் -  1996
    * இராமாநுசர் வரலாறு - 1999
    * பாரதியார் கட்டுரைகள் - 2002
    * இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை - 2006
    * கொங்கு களஞ்சியம் - 2006

சிறுவர் நூல்கள்:

    * சிற்பி தரும் ஆத்திசூடி- 1993
    * வண்ணப்பூக்கள் – 1994

விருதுகள்:

    * சாகித்திய அகாதெமி விருது – 2001, 2003
    * தமிழக அரசின் பாவேந்தர் விருது
    * அரசர் முத்தையாவேள் பரிசில்
    * கலைமாமணி விருது
    * கபிலர் விருது

இவர் பற்றி:

    * இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தினையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மாகலிங்கம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். பின்னர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.  தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருசியன் உள்ளிட்ட பலமொழிகளையும் அறிந்தவர். சிறந்த கவிஞராகவும். இலக்கிய இதழாசிரியராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்குகிறார் கவிஞர் சிற்பியவர்கள். வானம்பாடி கவிதை இயக்கத்தில் பெரும்பங்காற்றினார். வானம்பாடி, அன்னம்விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட பல ஏடுகளிலும் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தவர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.http://www.tamilauthors.com/writers/india/Sirpy.html


பேராசிரியர் சிற்பி

சிற்பி தம் தலைமையுரையில் தனித்தமிழ் இயக்கம் பற்றிய நம்பிக்கை எனக்கு அன்றும் இல்லை,இன்றும் இல்லை என்றார்.மறைமலையடிகள் எழுதிய தமிழ் தனக்குப் படித்தால் புரிவதில்லை என்றார்(இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர்,இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தில் பல்லாண்டுகள் தலைவர். இவர் தலைமையில்தான் சாகித்திய அகாதெமியின் தமிழ்ப்பிரிவு இயங்குகிறது).

இத்தகு கொள்கையுடைய எனக்கும் தமிழின் மீது பற்று கொண்ட பஞ்சு அவர்களுக்கும் நட்பு சிவகங்கையில் மீரா அவர்களின் அலுவலகத்தில் உரசலில் தொடங்கியது.உரசலில் தொடங்கிய காதல் நிலைபெறுவதுபோல எங்கள் நட்பு நிலைபெற்றுள்ளது.பஞ்சு கவிதை, சிறுகதை,நாவல்,திறனாய்வு,மொழிபெயர்ப்பு என ஐந்து துறைகளில் வல்லவர்.பஞ்சாங்கம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.திறனாய்வு என்பது தமிழில் பிறரைக் காயப்படுத்துவது என்று உள்ளது.

நோய்வாய்ப்பட்ட கவிஞர் கீட்சைத் திறனாய்வுதான் கொன்றது.கத்தியைத் தீட்டுவது அல்ல திறனாய்வு,புத்தியைத் தீட்டுவது.மார்க்சிய அடிப்படையில் திறனாய்வுத்துறையில் சிறப்புடன் விளங்குபவர் பஞ்சாங்கம்.திறனாய்வை முன்னெடுத்துச் செல்லும் பக்குவம் இவருக்கு உண்டு.பெண்ணியத் திறனாய்வு என்பது முழக்கங்களில் முடிந்துபோவதல்ல.பல்வேறு திறனாய்வுமுறைகள் அறிந்தவர் பஞ்சு.

தமிழ்ப்படைப்புகள் பற்றிய நல்ல புரிதல் உடையவர் பஞ்சு.பஞ்சுவின் திறனாய்வு படைப்பாகவே விளங்கும்.திறனாய்வு வரிகளே தனித்துவம் கொண்டது.தமிழின் வேர்கள் எதுவோ அதன்பக்கம் நிற்பவர் பஞ்சு.சிலப்பதிகாரம் பற்றிய இவரின் திறனாய்வுநூல் குறிப்பிடத்தகுந்தது என்று பேசினார்.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்,கி.இராசநாராயணன்,இரவிக்குமார்(ச.ம.உ)பாரதிபுத்திரன், பாலா,காவ்யா சண்முகசுந்தரம், த.பழமலய், கேமச்சந்திரன், ஆ.திருநாகலிங்கம், ந.முருகேசபாண்டியன்,கேசவ பழனிவேலு,இரவிசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு முனைவர் பழ.அதியமான்,கவிஞர் பச்சியப்பன்,பேராசிரியர் ஆரோக்கியநாதன், பழ.முத்துவீரப்பன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)பேராசிரியர் இரவிக்குமார் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பேராசிரியர்கள், படைப்பாளிகள் வந்திருந்தனர்.


பச்சியப்பன்,இரவி,பழமலை,பாரதிப்புத்திரன் http://muelangovan.blogspot.com/2009/02/blog-post_07.htmlகவிஞர் சிற்பியின் கவிதைகள் குறித்த ஒரு திறனாய்வு
பி.மருதநாயகம்

தமிழ்க்கவிதை புனைவு முயற்சியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருபவர், கவிஞர் சிற்பி. மகாகவி பாரதியின் வழித்தோன்றலாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த முயற்சியில் இயங்கி வருபவர். கவிஞர் சிற்பியின் கவிதைகளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், கவிஞர்களும், திறனாய்வாளர்களும் பலவகைப்பட்ட கோணங்களில் ஆய்வுகளைச் செய்துள்ளனர். சிற்பியின் படைப்புக்கலை, சிற்பியின் படைப்புலகம், சிற்பியின் கவிதை வளம், சிற்பியின் கருத்தியல் வளம், கோபுரத்தில் ஒரு குயில் போன்ற தனி நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது "Sirpi Poet as Sculptor" என்ற விமர்சன நூலை முன்னாள் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் மருதநாயகம் எழுதியுள்ளார்.

நெருடல் இல்லாத வளமான ஆங்கில மொழி நடையில் கவிஞர் சிற்பியின் கவிதைகளை அவற்றின் ஒவ்வொரு நுணுக்கங்களுடனும் ஆய்வு செய்து அவரது கவிதைப் படைப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் மரபுவழிக் கவிதை ஆக்கத்தைப் பின்பற்றினாலும் கவிஞர் சிற்பி தனக்கே உரிய தனித்தன்மைகளை அவர் கையாண்டுள்ள கவிதைக் கருத்துக்களின் வாயிலாக நிலைபெறச் செய்திருக்கிறார் என்ற கருத்தைத் திறனாய்வாளர் நிலைப்படுத்தியிருக்கிறார்.

கவிஞர் சிற்பியின் சுய வெளிப்பாட்டு முறைகளையும், பலவகையான கவிதை வரிகனையும் அங்கங்கே ஆங்கில மொழிபெயர்ப்பில் தெளிவாகப் புலப்படுத்தி, அவருடைய பன்முகக் கண்ணோட்டத்தை மிகுந்த நுட்பங்களுடன் விளக்கிக் காட்டுகிறார். கவிதைகளின் தனித்தன்மைகளில் நிறைந்திருக்கும் மாறுபட்ட வெளிப்பாட்டு மொழிகளைத் திறனாய்வாளர் கூர்மையாகக் கவனித்து ஒவ்வொன்றையும் இனம் காட்டுகிறார். தொன்மங்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டு தன்னுடைய நிகழ்காலக் கண்ணோட்டத்தில் எப்படியெல்லாம் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைத் திறனாய்வாளர் தகுந்த ஆதாரங்களோடு நிரூபணம் செய்திருக்கிறார்.

புதுக்கவிதை முயற்சிக்கு வந்த கவிஞர் சிற்பி வடிவத்தை தன்னுடைய ஒவ்வொரு கருப்பொருளுக்கும் ஏற்றபடி எப்படி உருவாக்கியிருக்கிறார் என்பதைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் அடையாளப்படுத்தியிருக்கிறார். இயற்கை, தனிமனிதன், சமூகம், வாழ்வியல், அறிவியல் போன்ற பல வகைப்பட்ட மாறுபட்ட, முரண்பட்ட தளங்களில் கவிஞர் சிற்பி இயங்கியுள்ள தன்மைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் புலப்படுத்தியிருப்பது வியப்பிற்குரிய ஒரு செய்தியாக இருக்கிறது.

சாராம்சத்தில் திறனாய்வாளர் குறிப்பிட்டுச் சொல்வது இதுதான்: Sirpi is also a very inventive and technically audacious writer, whose chief weapon is metaphor. Even when the subject is light, he can playfully accumulate metaphors that one simple and complex, direct and mixed.

இதுபோன்ற திறனாய்வு நூல்கள் தமிழ்மொழியில் நிறைய எழுதப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது இந்த ஆங்கில நூல்.

(வெளியீடு : நந்தினி பதிப்பகம், 169ஏ, 6வது தெரு விரிவு, காந்திபுரம், கோவை 12. ரூ. 100)http://www.keetru.com/kanavu/dec08/marudanayagam.php